This Article is From Mar 14, 2020

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக இருக்கக்கூடிய சூழலில், இறப்பு எண்ணிக்கை இரண்டாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

சர்வதேச அளவில் கொரோன வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் தற்போது அணைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவும் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வதற்குப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் உட்பட ரத்து செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும் பல மாநிலங்களில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒடிசாவில், கொரோனா வைரஸ் பாதிப்பினை மாநில பேரிடராக அறிவித்துத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 200 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கின்றது அம்மாநில அரசு.

இந்த நிலையில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை இரவு ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. அதில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் LKG, UKG (pre-KG உட்பட) வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கும் மற்றும் கேரள மாநிலத்தையொட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், திருப்பூர், மற்றும் நீலகிரி மாவட்டங்களில், LKG (pre-KG உட்பட) வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கும், கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 16.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளிக்க அரசால் முடிவெடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக இருக்கக்கூடிய சூழலில், இறப்பு எண்ணிக்கை இரண்டாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

.