முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊர்களில் குடும்பத்துடன் கொண்டாடினர்.
முதல்வர் பழனிசாமி, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள தனது கிராமத்தில் சொந்தங்களுடன் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். முன்னதாக, எடப்பாடியில் உள்ள கோயிலுக்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த அவர் அதனைத் தொடர்ந்து பொங்கல் விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிட்டார். பின்னர், சிறுது நேரம் சிலம்பம் விளையாடி மகிழ்ந்தார்.
இதேபோன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் பொங்கலை கொண்டாடினார். வீட்டில் வைத்தே தனது குடும்பத்துடன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய அவர் பின்னர் தனது சொந்தங்கள், கட்சி தொண்டர்களுக்கு சர்க்கரைப் பொங்கல்வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும், சொந்தங்களுடனும் புத்தாடை உடுத்தி வீட்டின் முன்பு பொங்கல் வைத்து, கரும்பு உண்டு பொங்கலை சிறப்பாக கொண்டாடினர்.