This Article is From Jun 26, 2020

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டியது முதல்வர்தான்: மு.க.ஸ்டாலின்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வியாபாரிகள் நேற்று உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டியது முதல்வர்தான்: மு.க.ஸ்டாலின்

நீதித்துறை மேல் நம்பிக்கை வைத்து உடலை வாங்குவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஏற்பட்ட அநீதி, என்னைத் தூங்கவிடவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் மொபைல் கடையை திறந்து வைத்திருந்ததாக அந்த வியாபாரிகளை கடையை மூடும்படி  வலியுறுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். 

இதைத்தொடர்ந்து, சிறையில் வைத்து அவர்கள் இருவரையும் போலீசார் கொடூரமாக தாக்கியதாக அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு போலீசார் அவர்கள் இருவரையும் தாக்கியதால் தான் அவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். 

இதனால், இருவரின் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது இரட்டைக் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வியாபாரிகள் நேற்று உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, ஜெயராஜ், பென்னிக்ஸ். காவல்துறையினரின் வன்முறையால், அராஜகத்தால், இந்த இருவரை, நாம் இழந்து நிற்கிறோம். இந்த இருவருக்கு ஏற்பட்ட அநீதி, என்னைத் தூங்கவிடவில்லை! 

தன் கடையை ஊரடங்கு நேரத்தில் மூடுவதற்குத் தாமதமாக்கினார்கள் என்ற காரணத்திற்காக இப்படிப்பட்ட தாக்குதல்களை நிகழ்த்த காவல்துறையினருக்கு யார் அனுமதி தந்தது?

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இன்னுயிருக்கு எந்த நிவாரணமும் ஈடு இல்லை. எனினும் பாதிக்கப்பட்ட குடும்பத்திலுள்ள 3 பெண் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்க, திமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்துள்ளோம்.

இந்த வழக்கின் விசாரணையை வேகமாகவும், தீவிரமாகவும், நேர்த்தியாகவும், நடத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க, சட்ட ரீதியாகவும் திமுக துணை நிற்கும்.

இந்த உயிர் பலிக்கு நிச்சயம் பொறுப்பேற்க வேண்டியது முதல்வர்தான். மக்கள் மன்றத்தால் விரைவில் அவர் தண்டிக்கப்படுவார் என்று அவர் தெரிவித்துள்ளார். 

.