நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்த முதல்வர் நிவாரண பணிகளை விரைவுபடுத்துமாறு உத்தரவு பிறப்பித்தார்.
புயலில் பாதிப்படைந்த விவசாயிகள், பொதுமக்களைச் சந்தித்து அவர்களுக்கு முதல்வர் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறிதாவது -
தமிழகத்தில் உள்ள மர வியாபாரிகளை அழைத்து புயலில் விழுந்த மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட நிலங்களில் உயர் தொழில்நுட்பத்தில் மீண்டும் மா, பலா, தென்னை, முந்திரி போன்ற மரங்களை பயிரிடவும், ஊடு பயிர் செய்யவும் அரசு முழு உதவி செய்யும்.
பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் குடிசை வீடுகளுக்கு பதிலாக 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் இன்னும் 5 நாட்களுக்குள் வழங்கப்படும்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.