நீட்டுக்கு ஆதரவாக முதல்வர் பேச்சு; மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம்: ஸ்டாலின் கண்டனம்
நீட் தேர்வுக்கு ஆதரவாக முதல்வர் பேசுவது மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நீட் தேர்வைத் தள்ளிவைப்பது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்த பிறகு நீட் தேர்வை நடத்த வலியுறுத்தி கடந்த ஜூலை மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.
மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடமும் நீட் தேர்வைத் தள்ளி வைக்க கோரி வலியுறுத்தப்பட்டது. தற்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் நீட் தேர்வைத் தள்ளி வைக்க கோரி கடிதம் எழுதியுள்ளார் என்று அவர் கூறினார்.
இந்நிலையில், கொரோனா முடிந்த பிறகு நீட் தேர்வு நடத்தலாம் என்று முதல்வர் பேசியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, கொரோனாவுக்கு பின் நீட் தேர்வு நடத்தலாம் என முதல்வர் கூறுவது மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம். நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு தேவை என்பதே தமிழக மக்களின் ஒருமித்த கோரிக்கை.
நீட் தேர்வுக்கு எதிராக சட்ட முன்வடிவுகளை நிறைவேற்றிவிட்டு அதற்கு மாறாக முதல்வரே பேசுவது விசித்திரம் தான். அனைத்து கட்சிகளின் ஆதரவோடு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கோரி சட்டம் இயற்றப்பட்டது. தனது அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு எதிராகவே பேசி முதல்வர் புதிய சாதனையை படைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடத்தமாட்டோம் என்று தமிழக அரசு பிரகடனப்படுத்த வேண்டும். 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்று பேரவையை கூட்டி அறிவிக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக அதிமுக அரசு நழுவிப்போக நினைத்தாலும் திமுக அனுமதிக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.