தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுவார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் முதலமைச்சர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகையில் புயல் சேத பகுதிகளை பார்வையிடுகிறார்.
தமிழகத்தின் நாகை, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை கடந்த 16-ம் தேதி கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதில் சுமார் 1.7 லட்சம் மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
புயலில் சிக்கி 45 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் உள்ள 493 நிவாரண முகாம்களில் 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தொற்று நோயை தடுக்க 372 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த சூழலில் கஜா புயலால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொள்கிறார்.