This Article is From Feb 20, 2019

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? மு.க.ஸ்டாலின் பளீர்

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? மு.க.ஸ்டாலின் பளீர்

வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. இதேபோல், திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, திமுகவுடன் தொகுதி பங்கீட்டை இறுதிசெய்ய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் வேணுகோபால், முகுல் வாஸ்னிக் ஆகியோர் சென்னை வந்தனர். சென்னை கிண்டி தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் வேணுகோபால், முகுல்வாஸ்னிக் ஆகியோருடன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி, விஜயதரணி உள்பட பலர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, மாலையில் அண்ணா அறிவாலயம் வந்த திமுக - காங்கிரஸ் நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து, திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,

மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. அதாவது, தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். எத்தனை தொகுதிகள் என்பது இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பதை இன்னும் சில கட்சிகளுடன் பேசி முடிவு செய்யப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து அவரிடம் தேமுதிக கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கடந்த காலத்தில் தோழமை கட்சிகளை அழைத்து பேசுவோம், ஆனால் தற்போது தேமுதிகவுடன் திமுக எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்றார்.

மேலும், ஒட்டலில் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தாமல் வெளிப்படையாக கூட்டணி குறித்து அறிவித்துள்ளோம். கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளித்த பின்னர் மீதமுள்ள தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்றும் அவர் கூறினார்.

 

மேலும் படிக்க: காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி ஒதுக்கீட்டில் முழுதிருப்தி: வேணுகோபால்
 

.