பிற்பகல் இரண்டு மணி வரை கொச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுத்தம்
ஹைலைட்ஸ்
- கேரளாவில் வரலாறு காணாத மழை, வெள்ள பாதிப்பு
- பலத்த காற்று வீசும் என இன்று காலை ஏழு மணிக்கு எச்சரிக்கை
- வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 42 பேர் பலி
Kochi: கேரள மாநிலத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. அணைகளில் நீர் நிரம்பியதால் நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், கொச்சி விமான நிலைய ஓடுபாதையிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து இன்று பிற்பகல் 2 மணி வரை கொச்சி விமான நிலையத்தில் அனைத்து விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்படுகின்றன என்று விமான நிலைய செய்தித்தொடர்பாளர் அறவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை ஏழு மணியளவில், "அடுத்த மூன்று மணிநேரத்துக்கு 60 கிமீ வேகத்தில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்யும்" என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, திருவனந்தபுரம் மலப்புரம் மாவட்டங்களில் தொடர்ந்து வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வெள்ள அபாயப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலச்சரிவுகளை அடுத்து வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 13,800 பேர் 124 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று சுதந்திர தின உரையில் பிரதமர், "பல பகுதிகளிலும் வெள்ளத்தால் மக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தாருடன் என் கவலையைப் பகிர்ந்துகொள்கிறேன்" என்று பேசியிருந்தார்.