This Article is From Dec 02, 2019

கோவை விபத்து: உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால் 3 ஓட்டு வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்ததில் 10 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவை விபத்து: உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு!

உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து விழுந்து உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இதனிடையே, தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளிலும், சாலைகளில் வெள்ளமெனத் தண்ணீர் தேங்கி உள்ளது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும், பல இடங்களில் மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால் 3 ஓட்டு வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்ததில் 10 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலரை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணி மேற்கொண்டுள்ளனர். 

இதனிடையே, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து விழுந்து உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் உயரிழிந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

.