Coimbatore News - ராம்குமாரின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், தோல், கண்கள் மற்றும் எலும்புகளை அவரது உடலில் இருந்து எடுத்துள்ளனர் மருத்துவர்கள். (Representational)
Coimbatore: கோயம்புத்தூரைச் (Coimbatore) சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் மரணமடைந்த பிறகு, அவரின் உடல் உறுப்புகள் (Body Organs) 9 பேருக்குப் பயன்பட்டுள்ளன. இதனால், இறப்பிற்குப் பின்னரும் இளைஞரைப் பலர் நெகிழ்ச்சியுடன் நினைவுகூறுகின்றனர்.
கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி, கோவையைச் சேர்ந்த பி.ராம்குமார் என்னும் 18 வயது இளைஞர், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியுள்ளார். அவர் உடனடியாக கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதைத் தொடர்ந்து கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிட்டலுக்கு (KMCH) ராம்குமார், சிறப்பு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். அங்கு மருத்துவர்கள் ராம்குமாருக்கு பலகட்ட சிகிச்சை அளித்த பின்னரும், அக்டோபர் 10 ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தார். இதைத் தொடர்ந்து ராம்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்களான பாலசுப்ரமணி மற்றும் சுப்ரியா முன்வந்துள்ளனர்.
அதன் பின்னர் ராம்குமாரின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், தோல், கண்கள் மற்றும் எலும்புகளை அவரது உடலில் இருந்து எடுத்துள்ளனர் மருத்துவர்கள்.
கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச் மருத்துவமனையில் இருந்த இருவருக்கு பொருத்தப்பட்ட நிலையில், இன்னொரு சிறுநீரகம், கண்கள், தோல் மற்றும் எலும்புகள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதேபோல இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குக் கொடுக்கப்பட்டன.
இந்த உறுப்பு தானம் மூலம் ராம்குமாரின் குடும்பத்தினர் மிகவும் பெருமைப்பட்டதாக கே.எம்.சி.எச் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.