கவிதா தனது அறையில் உள்ள மின்விசியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். (Representational)
Coimbatore, Tamil Nadu: வளர்ப்பு நாயை கைவிடக்கோரி பெற்றோர்கள் தெரிவித்ததால் 24 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கவிதா கடந்த இரண்டு வருடங்களாக சீசர் என்ற நாய்க்குட்டியை மிகவும் செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று இரவில் பெய்த கனமழை மற்றும் இடி, மின்னலுக்கு பயந்த அந்த நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்திருக்கிறது. இதனால் அக்கம்பக்கத்து வீட்டார் நாய் தொடர்ந்து குரைப்பதால் தங்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், நாய் வளர்ப்பதை கைவிடும்படியும் கவிதாவின் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
இதனால் கவிதாவை கடுமையாக திட்டிய அவரது தந்தை நாயை வேறு எதாவது பகுதியில் கொண்டு விடும்படி கோபமாக கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாத கவிதா, தனது செல்ல நாயிடம் இருந்து தன்னை பிரித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து, தனது அறைக்கு சென்ற கவிதா அங்கிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, கவிதா எழுதி வைத்த கடிதம் ஒன்று சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதில், குடும்பத்தார் தன்னை மன்னித்து விடுமாறும், தனது செல்ல நாயை குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வாரவாரம் குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு சென்று வரும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
செல்ல நாயை பிரிய மனமில்லாத இளம்பெண் கவிதா, அதற்காக தனது உயிரையே மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.