This Article is From Apr 01, 2019

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை; குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தோஷ் குமார்!

சந்தோஷ் குமார் என்பவரது பாட்டி வீடு, சிறுமியின் வீட்டுக்கு அருகில் இருந்துள்ளது

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை; குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தோஷ் குமார்!

சிறுமி இறந்த அதே நாளில், சந்தோஷ் குமாரின் பாட்டியும் இறந்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

கோவையில் உள்ள துடியலூரில் சில நாட்களுக்கு முன்னர் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அவருக்குப் பிரேத பரிசோதனை செய்ததில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து காவல் துறை தீவிரமாக விசாரித்து வந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற நபரை போலீஸ் கைது செய்தது விசாரித்து வந்தது. தற்போது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த திங்கட்கிழமை, மார்ச் 25 ஆம் தேதி, துடியலூர் பகுதியில் சிறுமி காணாமல் போயுள்ளார். மறுநாள் அவரது வீட்டின் அருகே சிறுமி இறந்த நிலையில் கிடந்துள்ளார். பிரதேப் பரிசோதனையில் சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்பது தெரிந்தது.

சந்தோஷ் குமார் என்பவரது பாட்டி வீடு, சிறுமியின் வீட்டுக்கு அருகில் இருந்துள்ளது. அவ்வப்போது அங்கு வந்து போகும் வழக்கத்தை சந்தோஷ் குமார் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, சந்தோஷ்குமார் மீது போலீஸார் சந்தேகப்பட்டுள்ளனர். அவரை கைது செய்து விசாரித்துள்ளனர். 

அதைத் தொடர்ந்துதான், பாட்டி வீட்டில் வைத்தே சிறுமியை சந்தோஷ் குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்றும், தொடர்ந்து சிறுமியை அங்கேயே கொன்றுள்ளார் என்னும் திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது. சந்தோஷ் குமார், தனது டி-ஷர்டை சுற்றி சிறுமியை, பாட்டி வீட்டுக்கு அருகில் வீசியுள்ளார். அவரது டி-ஷர்டை வைத்துதான் சந்தோஷ் குமார் மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்துள்ளது. 

தற்போது, தான் செய்த குற்றத்தை சந்தோஷ் குமார் ஒப்புக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி இறந்த அதே நாளில், சந்தோஷ் குமாரின் பாட்டியும் இறந்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. இந்த இறப்பு குறித்தும் தற்போது காவல் துறை விசாரணை செய்து வருகிறது. 

.