சென்னை: கடந்த ஏப்ரல் மாதம், கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் உதவி பேராசிரியை நிர்மலா தேவி என்பவர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த நிர்மலா தேவி மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
இதனை அடுத்து, சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கை விசாரித்தனர். கடந்த ஏப்ரல் மாதம், நிர்மலா தேவி உள்ளிட்ட 3 பேரின் வீடுகளில் நடைப்பெற்ற சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனியை சேர்ந்த கனேஷன் என்பவர், இந்த வழக்கை புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். மேலும், இந்த வழக்கு விசாரணை குழுவில் டி.ஐ.ஜி பதிவிக்கு இணையான பெண் அதிகாரியை கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதனை அடுத்து தலைமை நீதிபதி தகில்ரமணி, நீதிபதி குலுவாடி ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை வந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி காவல் துறை கண்காணிப்பாளர் லாவண்யா மனு தாக்கல் செய்தார்.
அதில், கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் உதவி பேராசிரியை நிர்மலா தேவி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரின் செல்போன் உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பெண்களை தவறான வழியில் வழி நடத்துவதை தடுக்கும் சட்ட பிரிவு, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)