Colonel Santosh Babu:நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவ வீரர் மனைவிக்கு துணை ஆட்சியர் பதவி: தெலுங்கானா அரசு
Hyderabad: கடந்த மாதம் லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவ வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சந்தோஷ் பாபுவின் மனைவி துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான பணி நியமன ஆணையை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், உயிரிழந்த சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷியிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்வின் போது, மூத்த அதிகாரிகள் மற்றும் மாநில அமைச்சர்கள் அவருடன் இருந்ததனர்.
இதுதொடர்பாக முதல்வர் சந்திரசேகர ராவ் கூறும்போது, 4 வயது மகனும், 8 வயது மகளும் உள்ள சந்தோஷி, ஐதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் பணி வழங்கப்பட வேண்டும். தொடர்ந்துஉ, முதல்வரின் செயலாளர் ஸ்மித்தா சபர்வாலை, சந்தோஷி அவரது பணிக்கு தயாராகும் வரை அவருக்கு துணையாக இருக்கும்படி முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
ராணுவ வீரர் சந்தோஷ் பாபவின் குடும்பத்திற்கு தெலுங்கானா அரசு எப்போதும் துணையாக இருக்கும் என்றும் முதல்வர் உத்தரவாதம் அளித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில், சந்தோஷியின் இல்லத்திற்கு முதல்வர் சந்திரசேகர ராவ் நேரில் சென்று சந்தித்தபோது, குரூப்-1 அதிகாரியாக சந்தோசியை நியமித்திருந்தார். தொடர்ந்து, அவரது குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் ரூ.5 கோடி நிதியுதவியும் அளித்தார்.
கடந்த ஜூன் 15ம் தேதி கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதில், 39 வயதான ராணுவ வீரர் சந்தோஷ் பாபுவும் ஒருவர் ஆவார்.