துரதிர்ஷ்டமாக நமது நாட்டில் ஒரே மொழியாக இந்தியை கொண்டு வர முடியாது.
பொதுவான மொழி என ஒன்று இருந்தால் அது நாட்டின் ஒற்றுமை, வளர்ச்சிக்கு நல்லது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்வீட்டர் பதிவில், இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம்.
தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்,' என கூறியிருந்தார்.
அமித் ஷாவின் இந்த இந்தி திணிப்பு குறித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமித்ஷாவின் கருத்திற்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, ‘வேற்றுமையில் ஒற்றுமை' என்பதே இந்தியாவின் பண்பாட்டு அடையாளம். பல்வேறு காரணங்களின் அடிப்படையிலான உள்நோக்கத்துடன், இந்த அடையாளத்தை சிதைத்து அழித்திடும் நடவடிக்கைகளை மத்தியில் பாஜக அரசு அமைந்த நாள்முதலே மேற்கொண்டு வருகிறது.
இது, இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்தி பேசாத மக்கள் அனைவரையும் ‘இரண்டாம் தர குடிமக்களாக்கும்' முயற்சியாகவே தெரிகிறது. இது இந்தியா; ‘இந்தி'யா அல்ல” என்று அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறம்போது, இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து, அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டிவிடும். தயவுசெய்து அதை செய்யாதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண முடியும்.
ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், சிறிய வெற்றி. எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் துவங்கினால், அது அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும் அந்த ஆபத்து இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது என கடுமையாக எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்திடம், அமித் ஷாவின் இந்தி திணிப்பு கருத்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது,
தமிழ்நாடு மட்டுமல்ல எந்த நாடாக இருந்தாலும், பொதுவான மொழி என ஒன்று இருந்தால் அது நாட்டின் ஒற்றுமை, வளர்ச்சிக்கு நல்லது. 'துரதிர்ஷ்டமாக நமது நாட்டில் ஒரே மொழியாக இந்தியை கொண்டு வர முடியாது'.
எந்த மொழியையும் இங்கு திணிக்க முடியாது. இந்தியை திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் எந்த மாநிலமும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஏன் வடமாநிலங்களிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.