இந்திய அளவில் இதுவரை வெளிவந்திருக்கும் திரைப்படங்களிலேயே பெரும் பொருட் செலவோடு உருவாகி, உலகமெங்கும் வெளியாகியிருக்கிறது ரஜினியின் ‘2.0'. ரிலீஸான முதல் நாளில் எவ்வளவு கலெக்ஷனை படம் அள்ளியிருக்கிறது என்று வணிக ரீதியாக ஒரு புறம் விவாதம் நடந்து வந்தாலும், கபாலி மற்றும் காலா திரைப்படங்களுடன் ஒப்பீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
மீம்ஸ்களே இந்த விவாதத்தின் கரு பொருளாக உள்ளது. அதில பல மீம்ஸ்கள், ரஜினியைக் குறிவைப்பதைவிட, இயக்குநர் ரஞ்சித்தைக் குறிவைக்கும் விதத்தில் இருப்பதை கவனிக்க முடிகிறது. ரஞ்சித்தால் ரஜினியின் மார்க்கெட் சரிந்துவிட்டது என்றும், அதை இயக்குநர் ஷங்கர் தான் 2.0 மூலம் மீட்டுக் கொண்டுவந்தார் என்பது போலவும் மீம்ஸ்களில் கூறப்பட்டுள்ளன.
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ரஞ்சித்தின் கபாலியும் காலாவும் வந்தபோது, தமிழர் விரோத ரஜினிகாந்தின் படங்களை புறக்கணிப்போம் என மீம்ஸ் போட்டவர்கள், ஷங்கர் இயக்கி 2.0 வரும்போது எங்கே சென்றனர்? அன்று மராட்டியராக தெரிந்த ரஜினி இன்று தமிழராகிவிட்டாரா? ஆக, காலா புறக்கணிப்பு ரஜினி எதிர்ப்பல்ல; ரஞ்சித் வெறுப்பே!' என்று பதிவிட்டார்.
இதை பலர் ரீ-ஷேர் செய்து விவாதத்துக்குத் தொடக்கப் புள்ளி வைத்துள்ளனர். ஒரு முகநூல் பயனர், ஷாநவாஸின் ட்வீட்டை ரீ-ஷேர் செய்து, ‘இதோ ஆரம்பிச்சிட்டாங்க இல்லே... பக்ஷிராஜா (2.0 படத்தில் வில்லனாக வரும் அக்ஷய் குமாரின் கதாபாத்திரத்தின் பெயர்) ஒரு தலித். ஆதிக்கசாதி சிட்டி அவனை ஆணவப்படுகொலை செய்யுறான்னு ஓர் ஆய்வறிக்கை விரைவில் வரும்!' என்று கிண்டல் செய்தார்.
ஷாநவாஸைத் தொடர்பு கொண்டு பேசினோம், ‘நான் ட்விட்டரில் பகிர்ந்த கருத்து என்பது ரஞ்சித்தின் நிலையிலிருந்த பிரச்னையைப் பார்த்து பதிவிடப்பட்டது. ஆனால், அதைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் சிலர் பேசி வருகின்றனர். அப்படி பேசுபவர்கள் ஆதிக்க நிலையிலிருந்து இதைப் பார்க்கின்றனர். அவர்களுக்கு இந்த வலி புரியாது' என்றவர்,
மேலும், ‘கபாலி மற்றும் காலா திரைப்படங்கள் வந்தபோது, நாம் தமிழர் கட்சியினர் பலர், ‘ரஜினி ஒரு தமிழர் விரோதி. தமிழர்களின் பணத்தில் பெரியாளாகிவிட்டு, தமிழர்களுக்கு எதிரான கருத்துகளை சொல்லி வருகிறார். அவரையும் அவருடைய திரைப்படங்களையும் புறக்கணிக்க வேண்டும்' என்று வெளிப்படையாக தெரிவித்தனர். ஆனால், அப்படிப்பட்டவர்களிடமிருந்து 2.0 குறித்து எந்த எதிர்வினையும் வரவில்லை.
மேலும் படிக்க : மெகா பட்ஜெட் படமான ‘2.0'வை வெளியிட்ட ‘தமிழ் ராக்கர்ஸ்' – ஷாக் மோடில் படக்குழுவினர்
ஆக, அவர்களுக்கு வெறுப்பு ரஜினி மீது அல்ல என்பது தெளிவாகிறது. அதைச் சுட்டிக் காட்டத்தான் அப்படியொரு ட்வீட்டை நான் பதிவிட்டேன். என்னைப் பொறுத்தவரை எந்தத் திரைப்படத்தையும் எதிர்க்கக் கூடாது. திரைப்படத்தில் ஏதாவது தவறான வகையில் சொல்லப்பட்டிருந்தால், அது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும்' என்று முடித்துக் கொண்டார்.
மேலும் படிக்க : ‘2.0'- ஹிட்டா… மிஸ்ஸா..? - திரைப்பட விமர்சனம்! - 2.0 Movie Review
எந்த ஒரு திரைப்படமும் விவாதத்துக்கு அப்பாற்பட்டதில்லை. ஆனால், எந்த நோக்கத்திற்காக விவாதம் கிளப்பப்படுகிறது என்பது முக்கியம்.