2.0 திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது
New Delhi: ரஜினி காந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், அதனை மறு தணிக்கை செய்யக்கோரி சென்சார் போர்டில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சிக்கலால் திட்டமிட்டபடி 2.0 வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படம் என்ற பெருமையுடன் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் நாளை வெளிவரக் காத்திருக்கிறது. இதில் வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், எமிஜாக்ஸன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தில் பறவைகள் ஆர்வலராக அக்ஷய் குமாரின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2.0 படம் தொடர்பாக வெளியான ட்ரெய்லரில், செல்போன்களை பயன்படுத்துவதால் வெளியாகும் கதிர்வீச்சு பறவைகளையும், விலங்குகளையும் பாதிக்கிறது என்பதைப் போல அக்ஷய் வசனம் பேசியிருக்கிறார்.
இந்த நிலையில், செல்லுலார் ஆப்பரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (Cellular Operators Association of India or COAI ) சார்பாக சென்சார் போர்டில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “சுற்றுச்சூழல், பறவைகள் மற்றும் மனிதர்களைப் பாதிக்கும் என செல்போன்களைப் பற்றியும், செல் டவர்களைப் பற்றியும் தவறான கருத்துக்கள் 2.0 படத்தில் இடம்பெற்றுள்ளன. எனவே 2.0 படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் புரொமோஷன் ஆகியவற்றுக்கு அளித்த ஒப்புதலை, சென்சார் போர்டு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்த புகாருக்கு முடிவு ஏற்படும் வரை படத்தின் வெளியீட்டை சஸ்பெண்ட் செய்து வைக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.0 படத்திற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த புதிய புகார் சிக்கலை எற்படுத்தியிருக்கிறது.