This Article is From May 02, 2019

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்… நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு காலக்கெடு!

காங்கிரஸ் தரப்பில் இதுவரை 11 புகார்கள், பிரதமர் மோடிக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ளது

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்… நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு காலக்கெடு!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் காலக்கெடு ஒதுக்க மறுத்துவிட்டது.

New Delhi:

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக புகார் கொடுத்தது குறித்து வரும் திங்கட்கிழமைக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக காங்கிரஸ் கட்சி, ‘பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா மீது புகார் அளித்தது குறித்து தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. 

காங்கிரஸ் தரப்பில் இதுவரை 11 புகார்கள், மோடிக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டில் மட்டுமே இதுவரை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. மீதம் உள்ள புகார்கள் குறித்து வரும் புதன்கிழமைக்குள் நடவடிக்கை எடுக்க இருப்பதாக வழக்கு விசாரணையின்போது தேர்தல் ஆணையம் கூறியது. 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் காலக்கெடு ஒதுக்க மறுத்துவிட்டது. மேலும், வரும் திங்கட்கிழமைக்குள் அனைத்து புகார்கள் குறித்தும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு கறார் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

சென்ற மாதம் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து அதிக புகார்கள் எழுந்தன. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட பிறகு, ‘வெறுப்பை உமிழும் வகையில் பிரசாரம் செய்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா. உங்களது அதிகாரத்தை மறந்துவீட்டார்களா?' என்று தேர்தல் ஆணையத்தை கேள்விகளால் நீதிமன்றம் துளைத்தது. 

இதையடுத்து, பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு, பிரசாரம் செய்ய தடை விதித்தது தேர்தல் ஆணையம். அதே நேரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
 

.