This Article is From Jun 18, 2020

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை இறைச்சி, மீன் கடைகள் செயல்படாது!!

பொது  மக்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் இருந்து  2 கிலோ மீட்டர் தொலைவிற்குள் மட்டுமே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.  அதைத் தாண்டி செல்லும்போது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை இறைச்சி, மீன் கடைகள் செயல்படாது!!

12 நாட்களுக்கு இறைச்சி மற்றும் மீன் கடைகள் சென்னையில் மூடப்படுகின்றன.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 12 நாட்கள் முழு ஊரடங்கு
  • இறைச்சி, மீன் மார்க்கெட்டுகள் செயல்படாது என சென்னை மாநகராட்சி அறிவிப்பு
  • பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கோரிக்கை

சென்னை, திருவள்ளூர்,  காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவு முதல் முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.  இதையொட்டி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி,  மீன் கடைகள் ஜூன் 30 வரை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 2-வது மாநிலமாக தமிழகம் உள்ளது.  இங்கு சென்னையில் மட்டும் 33 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முழுமையான ஊரடங்கு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.  இதையொட்டி, அத்தியாவசிய தேவையை தவிர்த்து மக்கள் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காய்கறி,  மளிகை கடைகளும் காலை 6  மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்.

பொது  மக்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் இருந்து  2 கிலோ மீட்டர் தொலைவிற்குள் மட்டுமே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.  அதைத் தாண்டி செல்லும்போது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இறைச்சி,  மீன் கடைகளும் செயல்படாது  என சென்னை மாநகாட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

சென்னை பெருநகர  மாநகராட்சி கட்டுப்பாட்டில் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம், சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சி கூடங்கள் இயங்கி வருகின்றன. தமிழக அரசு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரையில் முழுமையான ஊரடங்கை அமல்படுத்தவுள்ளது. 

எனவே கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த முழுமையான ஊரடங்கு காலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மேற்கூறிய 4 இறைச்சி கூடங்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  அனைத்து கோழி,  ஆடு, மாடு, இறைச்சி கடைகள் மற்றும் மீன்கடைகள் ஆகியவை ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழுமையாக மூடப்படுகின்றன. எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

.