7 நாட்களுக்கு மதுரையில் முழு பொது முடக்கம் நடைமுறையில் இருக்கும்.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் சென்னையைப் போல மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரிப்பு
- மதுரையில் 7 நாட்கள் முழு ஊரடங்கு போடப்படும் என அரசு உத்தரவு
- முழு ஊரடங்கு தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மதுரையில் நாளை நள்ளிரவு முதல் ஜூன் 30 தேதி வரையில் முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், பரவை டவுண் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் ஜூன் 23 நள்ளிரவு முதல் ஜூன் 30 வரையில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
சுகாதாரத்துறை வல்லுனர்கள், மருத்துவ குழுவின் பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும்.
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள், பரவை டவுண் பஞ்சாயத்திற்கு உட்பட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. சராசரியை விட அதிகமான நெருக்கடியில் மக்கள் இங்கு வசிப்பது கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம்.
மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இங்கெல்லாம் முழு ஊரடங்கு ஏற்படுத்த வேண்டும் என்றும், கொரோனா பாதிப்பு அறிகுறி உடையவர்களை முன்கூட்டியே அடையாளம் காண வேண்டும் என்றும் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் 7 நாட்களுக்கு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும். இந்த கால கட்டத்தில் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு தடையில்லை.
அவசரம் மற்றும் மருத்துவ பணிகளை தவிர்த்து மற்ற பணிகளுக்கு ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்கள் இயங்க அனுமதியில்லை.
33 சதவீத பணியாளர்களுடன் மாநில அரசு அலுவலகங்கள் இயங்கலாம். அத்தியாவசிய பணிகளுக்காக மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். நோய்க்கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை.
ஏ.டி.எம். சேவைகளுக்கு தடையில்லை. ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும்.
குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகள் காய்கறி கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்க்குகள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இவை காலை 6 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும். மக்கள் தங்களது இருப்பிடத்திலிருந்து அதிகபட்சம் 1 கிலோ மீட்டர் வரைக்கும் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கலாம்.
உணவகங்களில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை உணவகங்கள் இயங்கலாம். டீக்கடைகள் செயல்பட அனுமதியில்லை.
அம்மா உணவகங்கள், சமுதாய சமையற்கூடங்கள் தொடர்ந்து செயல்படும். அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று தொண்டு நிறுவனங்கள் நிவாரண பணிகள் மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.