தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.
தற்போதைய சூழலில் தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த வாய்ப்பு இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட பொது முடக்கம் மே 3-ம்தேதியுடன் முடிவுக்கு வருகிறது. ஆனால் கொரோனா பரவல் இந்தியாவில் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் சென்னையில் மட்டும் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இன்று மட்டும் சென்னையில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது-
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து முதல்வரிடம் எடுத்துக் கூறினோம். பல மாவட்டங்களில் பாதிப்பு குறைந்துள்ளது. சில மாவட்டங்களில்தான் அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில் மாநில அளவில் ஊரடங்கை முழுமையாக நீக்க முடியாது. இதுதொடர்பான முடிவை அரசுதான் எடுக்கும்.
படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தினோம். கட்டுப்பாடுகள் தளர்ந்தாலும், பொது இடங்களில் மாஸ்க் அணிதல், கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளுதல், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை மக்கள் கடைபிடிக்க வேண்டும். நம்முடன் இந்த கொரோனா வைரஸ் நீண்ட நாளுக்கு இருக்கும். எனவே நம்முடைய வாழ்க்கை முறையையே மாற்றும் நிலைக்கு ஆளாகியுள்ளோம்.
வயதில் முதிர்ந்தோரை பாதுகாக்க வேண்டும். இள வயதினர் முதியோருடன் நெருங்கிப் பழகுதலை தவிர்க்க வேண்டும். நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நல்ல சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கூட்டம் கூடுவதை அனுமதிக்க கூடாது. இதற்கு மக்கள் அனைவரின் ஒத்துழைப்பு தேவை. அப்போதுதான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.