தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் ஒரேயொருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
- சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது
- பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை சீராக உள்ளதென அதிகாரிகள் தகவல்
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை சீராக உள்ளதென்று தமிழக சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், 'கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் இன்று ஆலோசனை நடத்தினார். இதுவரையில் ஒரேயொருவருக்கு மட்டும்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரமாக அவரது உடல்நிலையைக் கண்காணித்தோம். உடல்நிலை சீராக உள்ளது. இங்கு மொத்தம் 330 வார்டுகள் உள்ளன. சிகிச்சைக்காக வருவோருக்கு அனைத்து வித வசதிகளும் செய்து தரப்படும்' என்றார்.
இந்தியாவில் 43 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தளவில் யாருக்கும் உயிரிழப்பு இதனால் ஏற்படவில்லை.
ஞாயிறு முதற்கொண்டு கேரளாவில் ஒருவர், டெல்லி, உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீரில் தலா ஒருவர் என்று மொத்தம் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் வுஹான் நகரை மையமாகக் கொண்டு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 100 நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துப் பத்தாயிரம் பேருக்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவைத் தவிர்த்து இத்தாலி, ரஷ்யாவில் கொரோனாவின் தாக்கம் கடுமையாக உள்ளது. வல்லரசு மற்றும் அனைத்து வித மருத்துவ வசதிகளும் கொண்ட அமெரிக்காவிலும் 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.