This Article is From Jan 07, 2019

''மக்களவை தேர்தலுடன் 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துங்கள்'' - ஸ்டாலின்

திருவாரூர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருக்கும் நிலையில், அதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

''மக்களவை தேர்தலுடன் 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துங்கள்'' - ஸ்டாலின்

மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருக்கும் 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது-

திருவாரூரில் கஜா புயல் நிவாரண பணிகள் நிறைவு பெறவில்லை. அத்தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் என்பது, நிவாரண பணிகளில் பின்னடைவை ஏற்படுத்தும். இதனால் மக்களின் அதிருப்தியும், கோபமும் அதிகமாகி வாக்களிக்க எதிரான மனநிலையை உருவாக்கி விடும். அப்படிப்பட்ட மனநிலை ஜனநாயகத்தை நிச்சயம் செழுமைப்படுத்தாது.

தேர்தல் வெற்றியை காட்டிலும் திருவாரூரில் நிவாரண பணிகள் தடைபட்டு விடக் கூடாது என்பதுதான் திமுகவின் கருத்து. இடைத்தேர்தலை ரத்து செய்து அறிவித்திருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவை அனைவரும் வரவேற்பார்கள்.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் இணைத்து, '' மினி சட்டமன்ற தேர்தல்'' என்று சொல்லும் அளவுக்கு காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நாளில் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

.