"சீக்கிரமே இது குறித்து தெளிவான முடிவெடுப்போம்”
நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துக் களமிறங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவிக்கையில், “நாங்குநேரி சட்டம்னறத் தொகுதியில் நாங்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம் என்பது எங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கும் தெரியும். எங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தோலித்துத்தான் இது குறித்து விளக்கம் அளிக்க முடியும். சீக்கிரமே இது குறித்து தெளிவான முடிவெடுப்போம்” என விளக்கம் அளித்துள்ளார்.
நாங்குநேரி தொகுதியில் தற்போது கன்னியாகுமரியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வசந்த குமார்தான், சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்துதான் அந்தத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் காங்கிரஸ் வசம் இருந்த அந்தத் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக பார்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்துதான் அழகிரி, விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருந்த கராத்தே தியாகராஜன், “தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும்” என்ற பரபரப்புக் கருத்தை சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்தார்.
தியாகராஜனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு, “எத்தனை நாட்களுக்குத்தான் திமுக, காங்கிரஸை தமிழகத்தில் சுமப்பது“ என்றார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக சஸ்பெண்டு செய்யப்பட்டார் கராத்தே தியாகராஜன். இந்நிலையில் நாங்குநேரி இடைத் தேர்தல் விவகாரத்தால், காங்கிரஸின் தனித்துப் போட்டி நிலைப்பாடு முன்னிலை பெற்றுள்ளது.