தற்போது மத்திய அரசால் ஜிடிபி குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 20015-06 ஆண்டு முதல் 2010-11 ஆண்டு வரை சராசரி ஜிடிபி வளர்ச்சி 7.9 சதவிகிதமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
New Delhi: மத்தியில் ஆளும் பாஜக அரசு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு என்று சொல்லப்படும் ஜிடிபி குறித்து புதியதாக தகவல் வெளியிட்டுள்ளது. அத்தகவலின்படி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காலத்தில் சொல்லப்பட்டதைவிட ஜிடிபி வளர்ச்சி குறைவாகவே இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ், மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளது.
மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஐமுகூ ஆட்சியில் 2010-11 ஆம் ஆண்டு தான் ஜிடிபி வளர்ச்சி அதிகமாக இருக்கிறதென்றும், அது 8.5 சதவிகித அளவுக்கு இருந்தது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அப்போது ஆட்சியிலிருந்த மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, ஜிடிபி வளர்ச்சி அதே காலக்கட்டத்தில் 10.3 சதவிகிதமாக இருந்தது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து நித்தி அயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறுகையில், ‘தற்போது கிடைத்த பலதரப்பட்ட தகவலின் அடிப்படையில், முந்தைய ஆண்டுகளுக்கான ஜிடிபி, மதிப்பீடு செய்யப்பட்டது. அதனால் தான் இந்த மாற்றம் வந்துள்ளது. அரசுக்கு, முந்தைய ஜிடிபி வளர்ச்சியைக் குறைத்துக் காட்டும் எந்த நோக்கமும் இல்லை' என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் தலைமை புள்ளியியல் வல்லுநர், பிரவின் ஸ்ரீவஸ்தவா, ‘தற்போது வெளியிட்டிருக்கும் ஜிடிபி குறித்தான அறிக்கை, சர்வதேச விதிமுறைகளை வைத்தே செய்யப்பட்டது. அதில் எந்தப் பிழையும் இல்லை' என்று கூறியுள்ளார்.
‘காங்கிரஸ் மற்றும் ப.சிதம்பரம், தங்கள் ஆட்சி காலத்தில் தற்போது இருப்பதைவிட ஜிடிபி வளர்ச்சி அதிகமாக இருந்தது என்று தொடர்ந்து சொல்லி வந்தனர். ஆனால், உண்மை இப்போது வெளிவந்திருக்கிறது' என்று பாஜக ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள காங்கிரஸ் தரப்பு, ‘பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி நடைமுறை மற்றும் அதிக வரி விதிப்பு ஆகியவற்றால் பிரதமரும், நிதி அமைச்சரும் இந்திய பொருளாதாரத்தை பாதாளத்துக்குத் தள்ளியுள்ளனர். அதை மறைக்கும் நோக்கில் அருண் ஜெட்லியும், மோடியும் தவறான ஜிடிபி தகவல்களை வெளியுட்டுள்ளனர்' என்று கொதித்துள்ளது.
தற்போது மத்திய அரசால் ஜிடிபி குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2005-06 ஆண்டு முதல் 2010-11 ஆண்டு வரை சராசரி ஜிடிபி வளர்ச்சி 7.9 சதவிகிதமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 2016-17 ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 6.7 சதவிகிதமாக இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.