China அரசிடம் நாம் கேட்க நிறைய இருக்கிறது என்றும் கூறி, ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி Manish Tewari.
New Delhi: சீன அதிபர் ஸி ஜின்பிங் (Xi Jinping) இந்தியாவுக்கு வரவுள்ள நிலையில் சீன (China) அரசுத் தரப்பு, “ஜம்மூ காஷ்மீர் (jammu and Kashmir) விவகாரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் கூறியுள்ளது. இதற்கு இந்திய அரசுத் தரப்பு, ‘காஷ்மீர் எங்கள் உள்நாட்டு விவகாரம். அதில் பிற நாடுகள் கருத்து தெரிவிக்கக் கூடாது' என்று கூறியது.
இந்த ரிப்ளை போதாது என்றும், இதற்கு மேலும் சீன அரசிடம் நாம் கேட்க நிறைய இருக்கிறது என்றும் கூறி, ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி மணிஷ் திவாரி.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஸி ஜின்பிங், காஷ்மீரை கவனித்து வருவதாக சொல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியோ அல்லது வெளியுறவுத் துறை அமைச்சகமோ ஏன் இவற்றைக் கேட்கவில்லை.
1) ஹாங் காங்கில் ஜனநாயக சக்திகள் நடத்தி வரும் போராட்டங்களைப் பார்த்து வருகிறோம்.
2)ஜின்ஜாங் மாகாணத்தில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களை கவனித்து வருகிறோம்.
3)டிபட்டில் தொடர்ந்து நடந்து வரும் ஒடுக்குமுறைகளை கவனித்து வருகிறோம்.
4)தென் சீனக் கடல் விவகாரத்தையும் உற்று நோக்கி வருகிறோம்” என்று கேள்வி கேட்க இருக்கும் விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளார் திவாரி.
முன்னதாக, இந்தியப் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் இடையிலான சந்திப்பு, வரும் 11 - 12 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் நேற்றைய தினம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது.
பிரதமர் மோடிக்கும் ஜின்பிங்கிற்கும் இடையிலான முதல் உச்சி மாநாடு கடந்த ஏப்ரல் 2018ல் சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தது. அதைத்தொடர்ந்து, இந்த இரண்டாவது உச்சிமாநாடு சென்னை அருகே உள்ள கடலோர நகரமான மாமல்லபுரத்தில் நடைபெறு உள்ளது.
ஜின்பிங்கின் இந்திய பயணத்திற்கு முன்னதாக சீனா, 'புதுடெல்லிக்கும் -இஸ்லாமாபாத்துக்கும் இடையில் காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்' என்று கூறியது, மேலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்த சீன அதிபர் காஷ்மீர் நிலைமையைக் கண்காணிப்பதாகக் கூறியதோடு, "முக்கிய நலன்களுக்காக" பாகிஸ்தானை ஆதரிப்பதாக இம்ரான் கானுக்கு உறுதியளித்ததாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் சீனாவின் கருத்து குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சீன அதிபர் ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பின்போது காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கிறது.
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா ஒருபோதும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு, நிலையானது மற்றும் தெளிவானது. சீனாவும் எங்கள் நிலையை நன்கு அறியும். மேலும், இது உள்நாட்டு விவகாரம். இந்த விவகாரத்தில் பிற நாடுகள் கருத்து தெரிவிக்கக் கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.