This Article is From Oct 05, 2019

அரியானா தேர்தல் : முன்னாள் மாநில தலைவர் ராஜினாமா! உட்கட்சி பூசலால் தவிக்கும் காங்கிரஸ்!!

மகாராஷ்டிர மற்றும் அரியானாவில் சட்டமன்ற தேர்தல் வரும் 21-ம்தேதி நடைபெறுகிறது. முடிவுகள் 24-ம்தேதி அறிவிக்கப்படுகின்றன. இந்த நிலையில் உட்கட்சி பிரச்னைகளால் காங்கிரஸ் கட்சி சிக்கலில் உள்ளது.

அரியானா தேர்தல் : முன்னாள் மாநில தலைவர் ராஜினாமா! உட்கட்சி பூசலால் தவிக்கும் காங்கிரஸ்!!

காங்கிரசின் அனைத்து மட்ட பொறுப்புகளில் இருந்தும் அசோக் தன்வார் விலகியுள்ளார்.

New Delhi:

அரியானா தேர்தலை அக்டோபர் 21-ம்தேதி நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார் தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். 

அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்த அசோக் தன்வார் அந்த பொறுப்பில் இருந்து கடந்த மாதம் கட்சியால் நீக்கப்பட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த தன்வார், 'ராகுல் காந்தியால் வழி நடத்தப்படுபவர்களை கட்சியை விட்டு நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்று விமர்சித்திருந்தார். 

இந்த நிலையில், கட்சியின் அனைத்து மட்ட பொறுப்புகளில் இருந்தும் அவர் தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் 4 பக்க கடிதம் ஒன்றை கட்சி தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், 'காங்கிரஸ் கட்சிக்கு பல சிக்கல்கள் எழுந்துள்ளன. அவை எதிர்க்கட்சியால் ஏற்பட்டவை அல்ல. கட்சிக்குள்ளே சிலர் சிக்கலை ஏற்படுத்துபவர்களாக உள்ளனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

ஏற்கனவே, அரியானா தேர்தலில் பணத்தை பெற்றுக் கொண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட சீட்டுகள் வழங்கப்படுவதாக தன்வார் குற்றம் சாட்டியிருந்தார். மாநிலத்தில் செல்வாக்கு பெற்றிருக்கும் ஒருவர் கட்சியை விட்டு விலகியிருப்பது காங்கிரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. 

அரியானா மாநில காங்கிரஸ் தலைவராக தன்வார் கடந்த 2014-ல் நியமிக்கப்பட்டார். நேற்று வெளியிடப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் அவரது பெயரும் இடம்பெற்றிருந்தது. 

90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டமன்றத்திற்கு வரும் 21-ம்தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதேபோன்று 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிராவிலும் அதே நாளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரு மாநில தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24-ம்தேதி அறிவிக்கப்படுகின்றன. 

அரியானாவைப் போன்று, மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் கட்சிக்குள் கலகம் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் பிரசாரம் செய்ய மாட்டேன் என மிரட்டல் விடுத்துள்ளார். 

With inputs from PTI

.