தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா கடிதம் அளித்திருந்தார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட பிரசாரங்கள் எடுபடவில்லை என்று அந்த கட்சியை சேர்ந்த புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. இதில் அந்த கட்சி மட்டுமே பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களை விட 303 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல சம்பவங்கள் மக்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் அவை அனைத்தையும் முறியடித்து பாஜக இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோல்வியை தழுவினார்.
இந்த நிலையில் காங்கிரசின் தேர்தல் பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
கட்சியை பலப்படுத்தும் விஷயங்களில் காங்கிரஸ் கவனம் செலுத்த வேண்டும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்பு, ஜி.எஸ்.டி.பிரச்னை., விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படாதது, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் காணப்பட்டன. இவை அனைத்தையும் மக்கள் மத்தியில் எடுத்துரைத்தோம். ஆனால் அவை எடுபடவில்லை.
இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
மக்ககளவை தேர்தலில் ரஃபேல் விவகாரம், வறுமை ஒழிப்பு திட்டம் உள்ளிட்டவற்றை காங்கிரஸ் பிரசாரம் செய்தது. இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு அந்தக்கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.