This Article is From Apr 15, 2020

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம்! பிரதமருக்கு முன்பு சோனியா காந்தி வீடியோ வெளியீடு!!

நேற்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், முழு முடக்க நடவடிக்கை காரணமாக யாரும் உணவில்லாமல் தவிக்கக்கூடாது என குறிப்பிட்டிருந்தார்.

கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காலை வீடியோ செய்தியை பகிர்ந்துள்ளார்.

New Delhi:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363 ஆக அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 மணியளவில் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, மருத்துவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், காவல்துறையினர் என கொரோனா தொற்று எதிரான போராட்டக்களத்தில் முன் நின்று பணியாற்றுபவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை காணொளி காட்சி மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த போர்க்களத்தில் முன்னணியில் உள்ள மருத்துவர்கள் சுகாதார பணியாளர்கள் போதுமான அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களைக் கொண்டிருக்காவிட்டாலும் கூட வீரியமாக கொரோனா தொற்றுக்கு எதிராக யுத்தத்தினை முன்னெடுத்து வருகிறார்கள். நாம் அனைவரும் ஒன்றாக இனைந்து போராடுவதன் மூலம் தேசபக்தி உணர்வினை அதிகரிக்கச் செய்கிறோம். போராடுபவர்களின் தேசபக்தி உணர்வு மட்டம் எவ்வளவு உயர்வானது என்பதை நாம் பார்க்க முடிகிறது. என்று சோனியா காந்தி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சமூக விலகலைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவு மற்றும் மத்திய அரசு பிறப்பித்திருந்த முழு முடக்க உத்தரவு (LOCKDOWN) போன்றவற்றினை உறுதி செய்ய காவல் துறையினரும், பாதுகாப்புப் படையினரும் தங்கள் கடமையினை சிறப்பாக செய்து வருகின்றனர். அவர்களோடு இணைந்து துப்புரவுத் தொழிலாளர்களும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லையென்றாலும் கூட தொற்று பரவலைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். அரசு அதிகாரிகளும் அத்தியாவசிய சேவைகளை உறுதிப்படுத்தக் கடுமையாக உழைத்து வருகின்றனர். தொற்று தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்கள் மீதான பாதுகாப்பு, கேள்வி குறியாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. இப்படியான சூழலில் நாம், மேற்குறிப்பிட்டுள்ள நபர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். அவர்களை துன்புறுத்துவது நமது பண்பாடு அல்ல. என சோனியா காந்தி கூறியுள்ளார்.

நம்மில் பல தன்னார்வலர்கள் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்கிறீர்கள். இது பாராட்டப்பட வேண்டிய விடயம். நாட்டின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஒரே ஒரு மாநிலத்தில் ஆட்சியிலிருந்தாலும் கூட மக்களுக்கான சேவையை செய்ய முன்னிலையில் நிற்கும். என சோனியா காந்தி வெளியிட்டிருந்த  காணொளியின் முடிவில் குறிப்பிட்டிருந்தார்.

தேசிய அளவில் பொருளாதாரம் ஏற்கெனவே மந்த நிலையிலிருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முழு முடக்க நடவடிக்கையும் பொருளாதாரத்தில் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளன. இதனை சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என சமீபத்தில் சோனியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், முழு முடக்க நடவடிக்கை காரணமாக யாரும் உணவில்லாமல் தவிக்கக்கூடாது என குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363 ஆக உயர்ந்துள்ளது. 339 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.