Read in English
This Article is From Feb 21, 2019

‘புல்வாமா தாக்குதல் நடந்த அன்று பிரதமர் செய்த காரியம்..!’- வரிந்துகட்டும் காங்கிரஸ்

இமாச்சல பிரதேசத்தில் டிஸ்கவரி ஆவணப் படத்திற்காக மோடி அன்று ஷூட்டிங் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

Advertisement
இந்தியா ,
New Delhi:

கடந்த வாரம் ஜம்மூ காஷ்மீர் மாநில புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘இந்த விஷயத்தில் எந்த அரசியலும் கிடையாது. நாங்கள் அரசுக்குத் துணை நிற்போம்' என்று பகிரங்கமாக அறிவித்தார். ஆனால், அதே காங்கிரஸ் கட்சி, இன்று ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. 

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த நிர்வாகி ரந்தீப் சுர்ஜேவாலா, ‘புல்வாமா தாக்குதல் நடந்தது மதியம் 3:10 மணிக்கு. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, தனது பிரசார வீடியோவுக்கு மாலை 6:10 மணி வரை ஷூட்டிங் செய்து கொண்டிருந்தார். புல்வாமா தாக்குதல் பற்றி தெரிந்த பின்னரும் மோடி இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். மொத்த தேசமும், நமது வீரர்கள் இறந்தது குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், மோடி பிரசார வீடியோ ஷூட்டிங்கில் பிஸியாக இருந்துள்ளார். இவரைப் போல ஒரு பிரதமர் இந்த உலகத்தில் இருக்க வாய்ப்பில்லை' என்று கறாராக விமர்சித்தார். 

இமாச்சல பிரதேசத்தில் டிஸ்கவரி ஆவணப் படத்திற்காக மோடி அன்று ஷூட்டிங் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

 

Advertisement

சுர்ஜேவாலா மேலும், ‘தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக மோடி அன்று வீடியோ ஷூட்டிங் செய்து கொண்டிருந்தார். மொத்த தேசமும் பசியை இழந்திருந்தபோது, டீயும் சமோசாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் மோடி. இது வெட்கக்கேடான செயல்' என்று கொதித்தார். 

நேற்று இந்தியா வந்திருந்த சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் மோடி, நெருக்கமாக உறவாடியது குறித்தும் காங்கிரஸ் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. இளவரசர் சல்மான், இந்தியா வருவதற்கு முன்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர், பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்வதாக ஒப்பந்தம் செய்தார். 

 

Advertisement

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாஜக தலைவர் அமித்ஷா கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில், காங்கிரஸை கடுமையாக சாடியிருந்தார். அவர் குறிப்பாக, ‘நமது வீரர்களின் தியாகம் வீண் போகாது. காரணம், இப்போது ஆட்சியில் இருப்பது காங்கிரஸ் கிடையாது. பாஜக' என்றார். அதைத் தொடர்ந்துதான் காங்கிரஸ் இப்படிப்பட்ட விமர்சனத்தை பிரதமர் மோடி மீது வைத்துள்ளது. 

காங்கிரஸின் இந்த கறார் விமர்சனத்துக்கு பாஜக தரப்பு, ‘சவுதி இளவரசரிடம் எல்லா விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளோம். இது குறித்து விமர்சிக்க காங்கிரஸுக்கு எந்தத் தகுதியும் இல்லை. இந்த விவகாரத்தில் எந்தவித அரசியலுக்கும் இடமில்லை' என்று விளக்கம் அளித்துள்ளது. 

Advertisement