This Article is From Mar 11, 2020

கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதற்காகக் காங்கிரஸிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேற்றம்!!

கடந்த ஆண்டு கர்நாடகத்தில் காங்கிரஸ் - மதச் சார்பற்ற ஜனதா தள கட்சியின் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. தற்போது மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மக்களவை தேர்தலில் 2 முறை தொடர் தோல்வியைக் காங்கிரஸ் சந்தித்துள்ளது.

கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதற்காகக் காங்கிரஸிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேற்றம்!!

சோனியா காந்திக்கு சிந்தியா அனுப்பிய ராஜினாமா கடிதத்தை தொடர்ந்து, அவர் மீது காங்கிரஸின் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • காங்கிரஸ் தலைமையுடன் சிந்தியாவுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது
  • 18 ஆண்டுகளாக காங்கிரஸில் உள்ளார் ஜோதிராதித்ய சிந்தியா
  • 4 முறை மத்திய பிரதேசம் குனா மக்களவை தொகுதி எம்.பியாக இருப்பவர் சிந்தியா
Bhopal:

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பைக் கட்சியின் மூத்த தலைவரான கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ளார். 

சோனியா காந்திக்கு சிந்தியா அனுப்பிய ராஜினாமா கடிதத்தைத் தொடர்ந்து, அவர் மீது காங்கிரஸின் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

சிந்தியாவின் வெளியேற்றத்திற்குக் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். மூத்த தலைவர் ஒருவர் கட்சியிலிருந்து வெளியேறியிருப்பது காங்கிரஸில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

நேற்று சிந்தியாவுக்கு விசுவாசமான மத்தியப் பிரதேச எம்எல்ஏக்கள் 17 பேர், பாஜக ஆளும் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு விமானத்தில் சென்றனர். அதன்பின்னர் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. 

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியாக இது பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா இன்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார். இதனால் அவர் கட்சியை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படியே அவர் சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளார். 

அவர் தனது கடிதத்தில், 'காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராகக் கடந்த 18 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறேன். இப்போது நான் வெளியேறும் நேரம் வந்து விட்டது. காங்கிரஸ் கட்சியின் எனது அடிப்படை உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்.

கட்சியை விட்டு வெளியேறினாலும், நாட்டுக்கும் மக்களுக்கும் எப்போதும் சேவை செய்ய வேண்டும் என்கிற எனது எண்ணம் மாறாது. காங்கிரஸில் இதற்கு மேலும் இருந்துகொண்டு என்னால் சேவை செய்ய முடியாது என நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு கர்நாடகத்தில் காங்கிரஸ் - மதச் சார்பற்ற ஜனதா தள கட்சியின் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. தற்போது மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மக்களவை தேர்தலில் 2 முறை தொடர் தோல்வியைக் காங்கிரஸ் சந்தித்துள்ளது.

அடுத்தடுத்து பின்னடைவைச் சந்தித்து வருவதால் காங்கிரசுக்கு இது நெருக்கடியான காலம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

.