கே.சி. வேணுகோபால் மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகியோர் கர்நாடகத்திற்கு செல்கின்றனர்.
Bengaluru: மக்களவை தேர்தல் முடிவைத் தொடர்ந்து கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதற்காக காங்கிரஸ் தலைமை தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கட்சியின் மூத்த தலைவர்கள் 2 பேர் கர்நாடகத்திற்கு சென்று பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் இறங்கவுள்ளனர்.
மொத்தம் 28 மக்களவை தொகுதிகளைக் கொண்ட கர்நாடகத்தில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. குறிப்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடா தான் போட்டியிட்ட தும்குரு தொகுதியில் தோல்வியை தழுவினார்.
அரசியலில் மிக மூத்த தலைவரான அவர் தோல்வி அடைந்திருப்பதற்கு மதசார்பற்ற ஜனதா தள கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மதசார்பற்ற ஜனதாதள எம்எல்.ஏ. கவுரி சங்கர், 'கூட்டணியில் இடம்பெறாமல் இருந்தால் தேவகவுடா வெற்றி பெற்றிருப்பார். கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நீடிப்பதை நாங்கள் விரும்பவில்லை' என்றார்.
கர்நாடகத்தில் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 105 இடங்கள் பாஜக வசம் உள்ளன. பெரும்பான்மையை பெறுவதற்கு அக்கட்சிக்கு இன்னும் 8 எம்எல்ஏக்கள் மட்டுமே தேவை. 79 இடங்களை பிடித்த காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற ஜனதா தளத்தின் 37 உறுப்பினர்களின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்து வருகிறது.
இதற்கிடையே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் பாஜக தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தகவல்கள் வெளியானது. ரமேஷ் ஜர்கிகோலி மற்றும் டாக்டர் சுதாகர் ஆகியோர் சமீபத்தில் பாஜக மூத்த தலைவர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்தனர்.
இந்த நிலையில், மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 26 தொகுதிகளை பாஜக கைப்பற்றி உள்ளது. இன்னும் சில நாட்களில் கூட்டணி ஆட்சி கர்நாடகத்தில் முடிவுக்கு வந்து விடும் என்று பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். இதன் காரணமாக கர்நாடகத்தில் காங்கிரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
இந்த நிலையில்தான் கே.சி. வேணுகோபால் மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகியோரை கர்நாடகத்திற்கு காங்கிரஸ் தலைமை அனுப்பியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் கர்நாடக அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.