New Delhi: அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் காய்நகர்த்தல்கள் ஆரம்பித்துவிட்டன. தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக இருக்கிறது. ஆனால், எதிர்கட்சிகளோ ஓரணியில் திரண்டு ஆளுங்கட்சியை எதிர்கொள்ள இயங்கி வருகின்றன.
நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில் தான் அதிகபட்ச நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. உத்தர பிரதேசத்தில் அதிக இடத்தில் வெற்றி பெறும் கட்சி தான் பெரும்பாலும் மத்தியில் ஆட்சி அமைக்கவும் செய்யும். இந்நிலையில்தான் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஆர்.எல்.டி போன்ற கட்சிகள் அம்மாநிலத்தில் ஓரணியில் நிற்க உடன்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
அம்மாநிலத்தில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து நடந்து வரும் இடைத் தேர்தல்களில் பாஜக-வுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஓரணியில் நிற்பதால் வெற்றிவாகை சூடிவருகின்றன. இதுவும் கூட்டணிக்கு புதிய உத்வேகத்தைத் தந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த ஆண்டுக்குள் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரேதச மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளன. இந்தத் தேர்தல்களிலும் ‘மெகா கூட்டணி’ தொடரும் என்று சொல்லப்படுகிறது. இந்தத் தேர்தல்களை ஒட்டித்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், சென்ற வாரம் மாயாவதியை சந்தித்து நீண்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் தொகுதிகள் பங்கீட்டில் இன்னும் ஓர் உடன்பாட்டுக்கு வரவில்லையாம். மாயாவதி மொத்தம் இருக்கும் 230 தொகுதிகளில் 50 தொகுதிகள் கேட்கிறாராம். ஆனால் காங்கிரஸ் தரப்போ 22 தொகுதிகள் மட்டுமே கொடுக்க ஒப்புக் கொள்கிறதாம்.
ஆனால், உத்தர பிரதேசத்தைப் பொறுத்தவரை சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜும் ஒன்றாக இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளன. எனவே, அம்மாநிலத்தின் இரு பெரும் கட்சி ஒன்றாகிவிட்டதால் மற்ற கட்சிகள் இணைவதில் சுணக்கம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியோ, தமிழ்நாடு, பிகார், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இப்போதே கூட்டணியை உறுதிபடுத்திவிட்டன.
ஜார்கண்டில் ஜேஎம்எம் கட்சியுடனும், தமிழகத்தில் திமுக-வுடனும் காங்கிரஸ் நல்ல நட்புறவில் இருப்பதால், அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் பாதிப்புகள் இருக்காது எனப்படுகிறது. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸுடன் தொகுதி பங்கீடு வரை காங்கிரஸ் பேசி முடித்துவிட்டதாம். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, 2019 லோக்சபா தேர்தலில் ஒன்றுபட்ட எதிர்கட்சியும் ஆளுங்கட்சியும் மோத வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.