This Article is From Apr 13, 2019

திமுக-காங்., கூட்டணி மீது மக்கள் ’சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்துவார்கள்: பியூஸ் கோயல்

மக்களவைத் தேர்தல் 2019: எனக்கு 7 வயது இருக்கும் போது, வறுமையை ஒழிப்பேன் என்று ராகுலின் பாட்டி (இந்திரா காந்தி) கூறினார். எனக்கு 20 வயது இருக்கும் போது, அவரது தந்தை (ராஜீவ் காந்தி) அதையே கூறினார்.

திமுக-காங்., கூட்டணி மீது மக்கள் ’சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்துவார்கள்: பியூஸ் கோயல்

காங்கிரஸ் அரசின் போது போடப்பட்ட ஒப்பந்தம் குறித்து ராகுல் பதிலளிக்க பியூஸ் வலியுறுத்துகிறார்.

Chennai:

வறுமைக்கு எதிரான 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்தப்படும் என ராகுல் காந்தி கூறியதை, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடுமையாக விமர்சித்துள்ளார். எனக்கு 7 வயது இருக்கும் போதிலிருந்து, காந்தி குடும்பத்திலிருந்து இந்த வார்த்தைகளை கேட்டு வருகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறும்போது, எனக்கு 7 வயது இருக்கும் போது, வறுமையை ஒழிப்பேன் என்று ராகுலின் பாட்டி (இந்திரா காந்தி) கூறினார். எனக்கு 20 வயது இருக்கும் போது, அவரது தந்தை (ராஜீவ் காந்தி) அதையே கூறினார். அப்போது, நான் ஒரு ரூபாய் நிதியாக அளித்தேன். ஆனால், 15 காசுகள் மட்டுமே ஏழைகளை சென்றடைந்தது என்றார்.

இதேபோல், 2004ல் எனக்கு 40 வயது இருக்கும் ராகுலின் தாயாரும் (சோனியா) அதையே கூறினார். தற்போது, எனக்கு 54 வயதாகிறது, இப்போதும், நான் 7 வயதில் கேட்ட அதையே தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ராகுலின் குடும்பம் 30 வருடங்களாக வறுமை இருக்க அனுமதித்தது ஏன்? என்பது குறித்து ராகுல் பதிலளிக்க வேண்டும்.

ஏழைகளின் வறுமை மீது துல்லிய தாக்குதல் நடத்தப்படும் என்கிறார் ராகுல்காந்தி. 3 தலைமுறையாக அவரது குடும்பத்தினர் கூறிவரும் பொய்களை மக்கள் கவனித்து வருகின்றனர். எனவே தமிழக மக்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணி மீது துல்லிய தாக்குதல் நடத்துவார்கள்.

வேலைவாய்ப்பு உருவாக்கவில்லை என்று ராகுல்காந்தி கூறுகிறார். சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் ‘ரெயில்-18' என்ற பெயரில் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், ராகுல்காந்தி இங்குள்ள என்ஜினீயர்களை அவமதிக்கும் வகையில், ரெயில்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்கிறார்.

ரபேல் ஊழல் குறித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறோம். அந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் என்றார். மேலும், நதிகள் இணைப்பு திட்டத்தை வரவேற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

.