Read in English
This Article is From Jan 15, 2019

“மாஜி சிபிஐ இயக்குநருடனான சந்திப்பு குறித்து தெரிவியுங்கள் பிரதமரே!”- கலகம் செய்யும் காங்கிரஸ்

சிபிஐ அமைப்பின் முன்னாள் இயக்குநரான அலோக் வெர்மாவின் நீக்கம் தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது

Advertisement
இந்தியா ,

பிரதமர் மோடி தலைமையில் அமைந்த குழு, வெர்மாவை இயக்குநர் பதவியிலிருந்து நீக்கியது

New Delhi:

சிபிஐ அமைப்பின் முன்னாள் இயக்குநரான அலோக் வெர்மாவின் நீக்கம் தொடர்ந்து சர்ச்சையாகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி மல்லிகார்ஜூனா கார்கே, “அலோக் வெர்மாவுடன் நடந்த சந்திப்பு குறித்தும், அவரது பதவி நீக்கம் குறித்து நடந்த கமிட்டி சந்திப்பு குறித்தும் பொதுத் தளத்தில் தெரிவிக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

சில நாட்களுக்கு முன்னர், சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வெர்மாவின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய பிரதமர் மோடி அமைத்தக் குழுவில் அவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரன்ஞன் கோகாயின் பிரதிநிதியான நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 

இதில் கார்கே, வெர்மாவின் பணி மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால் பிரதமர் மோடி மற்றும் நீதிபதி சிக்ரி, வெர்மாவை நீக்க சம்மதம் தெரிவித்தனர் என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து வெர்மா, சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் இந்திய அளவில் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், நீதிபதி சிக்ரி, பிரதமர் அமைத்தக் குழுவில் இருக்க விரும்பவில்லை என்று NDTV-க்குத் தகவல் வந்துள்ளது. தன் முடிவு குறித்து நீதிபதி சிக்ரி, கார்கே மற்றும் பிரதமர் மோடியிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இந்த விவகாரம் தற்போது பூதகரமாகி வரும் நிலையில், கார்கே பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், “அலோக் வெர்மாவுடன் நடந்த சந்திப்பு குறித்தும், மத்திய விசாரணை ஆணையமான சிவிசி நடத்திய புலனாய்வு குறித்தும் இருக்கின்ற ஆவணங்களை நீங்கள் பொதுத் தளத்தில் வெளியிட வேண்டும். நான் பங்கு பெற்றிருந்த கமிட்டியில், சிபிஐ இயக்குநர் விவகாரத்தில் சட்டமும் நீதிமன்ற தீர்ப்பும் பின்பற்றப்பட வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், சிவிசி அமைப்பு நடத்திய விசாரணையின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது. அதே நேரத்தில் சிவிசி அமைப்புக்காக விசாரணை செய்த நீதிபதி பட்நாயக், ‘அலோக் வெர்மாவுக்கு எதிரான எந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் தகுந்த ஆதாரம் கிடைக்கவில்லை' என்று கூறியுள்ளார். அவர், சிவிசி அமைப்பின் முடிவையும் விமர்சித்துள்ளார். 

இதைப் போன்ற அவமானத்தை அரசால் கண்டிப்பாக தவிர்த்திருக்க முடியும். ஆனால், அரசின் தவறுதலான நடவடிக்கையால் தற்போது நீதிமன்றத்துக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வெர்மாவை நீக்கியதும், அரசு இடைக்கால இயக்குநரை நியமித்ததும் சட்ட விரோதமான செயல். உடனடியாக ஒரு தேர்வாணையத்தைக் கூட்டி, உரிய முறையில் சிபிஐ இயக்குநர் நியமிக்கப்பட வேண்டும்” என்று கார்கே கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வெர்மா மீது லஞ்சப் புகார் சுமத்தப்பட்டு, அது குறித்து உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில், வெர்மாவுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தது. அவரை மீண்டும் சிபிஐ இயக்குநராக தொடர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பிரதமர் மோடி தலைமையில் அமைந்த குழு, வெர்மாவை இயக்குநர் பதவியிலிருந்து நீக்கியது. இதையடுத்து, தனது பதவியை வெர்மா ராஜினாமா செய்தார். 


 

  .  
Advertisement