ஆகஸ்டு 1ம் தேதிக்கு பின்னர் அவர் அரசு பங்களாவில் தங்கினால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஹைலைட்ஸ்
- பிரியங்கா காந்தி டெல்லி அரசு பங்களாவில் வசித்து வருகிறார்
- பிரியங்காவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு கடந்த ஆண்டு நீக்கப்பட்டது
- பங்களாவை விட்டு வெளியேற ஆகஸ்ட் வரையில் கெடு விதிக்கப்பட்டுள்ளது
New Delhi: சிறப்பு பாதுகாப்பு கடந்த ஆண்டு திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து டெல்லி அரசு பங்களாவை காலி செய்ய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் 1-ம்தேதிக்குள் பிரியங்கா காலி செய்திருக்க வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரியங்கா காந்திக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது-
சிறப்பு கமாண்டோ படை பாதுகாப்பு மற்றும் இசட் ப்ளஸ் பாதுகாப்பு ஆகியவை பிரியங்கா காந்திக்கு கடந்த ஆண்டு உள்துறை அமைச்சகத்தால் திரும்பப் பெறப்பட்டது. இதன் அடிப்படையில் அவர் அரசு பங்களாக்களில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார். எனவே லோதி எஸ்டேட், எண் 6பி பங்களாவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. ஆகஸ்ட் 1-ம்தேதிக்குள் பிரியங்கா பங்களாவை காலி செய்திருக்க வேண்டும். அதற்கு மேல் அவர் பங்களாவில் தங்கியிருந்தால் அதற்கு அவர் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
இவ்வாறு நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரியங்கா காந்தி தற்போது டெல்லியில் அதிக பாதுகாப்பு நிறைந்த லோதி ரோடு பங்களாவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு, பிரியங்கா காந்தி, ராகுல், அவர்களது தாயாரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு கடந்த ஆண்டு நவம்பரில் திரும்பப்பெறப்பட்டது.