பொருளாதார வீழ்ச்சியை மத்திய அரசு எப்போது சரி செய்யும் என பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார்.
New Delhi: இந்தியாவில் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதை மத்திய அரசு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவை சந்தித்து, இந்தியாவின் வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கிறது. பல்வேறு துறைகளில் பொருளாதார மந்த நிலை காரணமாக பிஸ்கட் முதல் கார் வரையிலான பொருட்கள் விற்பனையாகாமல் தேக்கத்தை சந்தித்துள்ளன. குறிப்பாக ஆட்டோ மொபைல் துறை கடும் பாதிப்பு அடைந்துள்ளது. சுமார் மூன்றரை லட்சம்பேர் அங்கு வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
மந்த நிலையை சரி செய்வதற்காக மத்திய அரசு நடவடிக்கையை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையை அரசு கையில் எடுத்துள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் மத்திய அரசை விமர்சித்துள்ளார். அவர் தனது பதிவில், 'நூறு முறை பொய் சொன்னாலும் பொய் உண்மையாகாது. வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இதனை மத்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். அதனை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.' என்று கூறியுள்ளார்.
பொருளாதார மந்த நிலைக்கு பாஜக அரசின் மோசமான நிர்வாகத்திறமைதான் காரணம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியிருந்தார். பழிவாங்கும் அரசியலை கைவிட்டு விட்டு நாட்டின் பொருளாதாரத்தை அரசு காப்பாற்ற வேண்டும் என்று அவர் சில நாட்களுக்கு முன்பு பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.