”நீதிபதி லோயா இடமாற்றம் செய்யப்படவில்லை” - ராகுல்
ஹைலைட்ஸ்
- நீதிபதி லோயா இடமாற்றம் செய்யப்படவில்லை
- டெல்லி வன்முறை வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர் இடமாற்றம்
- மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் அரசின் முயற்சி - பிரியங்கா காந்தி
New Delhi: துணிச்சலாகச் செயல்பட்ட நீதிபதி லோயா இடமாற்றம் செய்யப்படவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது உயர் நீதிபதியாகத் திகழ்ந்த நீதிபதி முரளிதரை நள்ளிரவில் இடமாற்றம் செய்யப்பட்டத்துத் தொடர்பாக மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லி வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் நடந்த வழக்கின் விசாரணையில், நீதிபதி முரளிதர் கடும் கிடுக்கு பிடி காட்டி வந்தார். இதைத்தொடர்ந்து, நள்ளிரவிலே அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக மத்திய அரசிடம் உத்தரவு வந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் நடத்தப்பட்ட போலி என்கவுண்ட்டர் வழக்கில் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா கடந்த 2014ம் ஆண்டு மர்ம மான முறையில் உயிரிழந்தார். அதனால், அந்த விவகாரம் பெரும் அரசியல் சர்ச்சையாக மாறியது.
இந்நிலையில், நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, துணிச்சலாகச் செயல்பட்ட நீதிபதி லோயா இடமாற்றம் செய்யப்படவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என நீதிபதி லோயாவை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நேற்றைய தினம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வடகிழக்கு வன்முறை தொடர்பான வழக்கை விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர், 1984-ல் ஏற்பட்ட சீக்கிய கலவரம் போன்ற ஒன்று மீண்டும் நடந்து விடக் கூடாது என்று கவலை தெரிவித்தார்.
தொடர்ந்து, வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியவர்கள் மீதும், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் படியும் அவர் உத்தரவிட்டார். அதேபோல், நீதிமன்ற அறையிலே, வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசிய பாஜக தலைவர்கள் கபில் மிஷ்ரா, அனுராக் தாகூர், அபே வர்மா, பர்வேஷ் வர்மா உள்ளிட்டோரின் வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டது.
இதுதொடர்பாக பிரியங்கா காந்தி தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை மாறாக, வருத்தமாகவும், வெட்கமாகவும் இருக்கிறது. கோடிக்கணக்கான இந்தியர்கள் நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் அரசின் முயற்சி இழிவானது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், மத்திய அரசு அளித்துள்ள அந்த இடமாற்ற உத்தரவில், நீதிபதி முரளிதர் எப்போது புதிய நீதிமன்றத்திற்குச் சென்று பொறுப்பை ஏற்க வேண்டும் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. உடனடியாக டெல்லி பணிகளை விடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக இடமாற்றம் செய்யப்படும் நீதிபதிகளுக்கு புதிய இட பணியை ஏற்க 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.