2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்
Chennai: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக-வுடன் கூட்டணி அமைத்துள்ளது காங்கிரஸ். திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொகுதிகள் விவரம் குறித்து சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலைநில், தற்போது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ்.
அதன்படி,
1. திருவள்ளுர் - கே. ஜெயக்குமார்
2. கிருஷ்ணகிரி - டாக்டர் ஏ. செல்லக்குமார்
3. ஆரணி - டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத்
4. கரூர் - எஸ். ஜோதிமணி
5. திருச்சிராப்பள்ளி - சு.திருநாவுக்கரசர்
6. தேனி - ஈவிகேஎஸ் இளங்கோவன்
7. விருதுநகர் - மாணிக்கம் தாகூர்
8. கன்னியாகுமரி - வசந்தகுமார்
9. புதுச்சேரி- வைத்திலிங்கம்
ஆகியோர் போட்டியிட உள்ளனர். சிவகங்கை தொகுதியும் காங்கிரஸுக்குத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை. பாஜக சார்பில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில், எச்.ராஜா, சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் பாஜக-வுக்கும் காங்கிரஸுக்கும் நேரடி போட்டி நடக்க உள்ளது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அல்லது அவர் மகன் கார்த்தி சிதம்பரம், சிவகங்கையில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலைக்குள் தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014 ஆம் ஆண்டு அங்கு நின்ற கார்த்தி சிதம்பரம், தோல்வியைத் தழுவினார். காங்கிரஸ் தலைமை இந்த முறை வெளியிட்டுள்ள தமிழக வேட்பாளர் பட்டியலில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பது கவனத்திற்க்குரியது.
தற்போது கூட்டணி வைத்துள்ள திமுக-வும் காங்கிரஸும் 2014 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஒற்றைத் தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை. ஆனால் 2004 ஆம் ஆண்டு இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து மாநிலத்தில் இருக்கும் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றின.
அடுத்த மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.