This Article is From Jan 24, 2019

லோக்சபா தேர்தலில் ஆந்திரா, மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியா..?- பரபர தகவல்கள்

ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்துத்தான் சமீபத்தில் நடந்த தெலங்கானா தேர்தலை எதிர்கொண்டது காங்கிரஸ்

டெல்லியைப் பொறுத்தவரை, ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

New Delhi:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். இனி கட்சியின் பொதுச் செயலாளராக, தனது சகோதரி பிரியங்கா காந்தி செயல்படுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலும், கிழக்கு உத்தர பிரதேசத்தின் தேர்தல் பொறுப்பாளராகளவும் பிரியங்காவை நியமித்தார் ராகுல். அகிலேஷ்-மாயாவதி இணை கூட்டணி வைத்து வரும் லோக்சபா தேர்தலை சந்திக்க உள்ளது. அவர்கள் கூட்டணியில் காங்கிரஸும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சி கழட்டிவிடப்பட்டுள்ளது. இதனால் வேறு வழியில்லாமல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் பாஜக-வுக்கும், அகிலேஷ்- மாயாவதி கூட்டணிக்கும், உ.பி-யில் நெருக்கடி கொடுக்கும் நோக்கில் பிரியங்காவை களமிறக்கி விட்டுள்ளார் ராகுல். 

இப்படி தேசிய அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள காங்கிரஸ், ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தனித்து மக்களவைத் தேர்தலை சந்திக்கும் என்று தகவல் கூறப்படுகிறது. 

ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்துத்தான் சமீபத்தில் நடந்த தெலங்கானா தேர்தலை எதிர்கொண்டது காங்கிரஸ். இருவரது கூட்டணியை தவிடுபொடியாக்கினார் கே.சந்திரசேகர் ராவ். அவரது தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இரண்டாவது முறையாக முதல்வரானார் கேசிஆர். தேர்தல் முடிவு, காங்கிரஸ் - தெலுங்கு தேசம் இடையில் மோதல் போக்கை அதிகரித்தது. இந்நிலையில்தான், வரும் லோக்சபா தேர்தலில் இருவரும் தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. 

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் இந்தியாவின் பிரதான எதிர்கட்சிகள் பலவும் மம்தா தலைமையிலான பேரணியில் கலந்து கொண்டன. அதற்கு ராகுல் காந்தி ஆதரவு மட்டும் தெரிவித்து, வருவதைத் தவிர்த்தார். இந்நிலையில் அங்கும் காங்கிரஸ் தனித்து களம் காண்பதுதான் சரியானதாக இருக்கும் என்று கட்சி மேலிடம் கருதுகிறது. அதற்கு ஏற்றாற் போல் மம்தாவும், தேர்தலை தனியாக சந்திக்க தயாராகி வருவதாக தெரிகிறது.

இந்த பரபர தகவல்களை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் ராகுல், “லோக்சபா தேர்தலை காங்கிரஸ் மென்மையாக அல்ல, ஆக்ரோஷமாக அணுகும்” என்று சூளுரைத்துள்ளார். 

டெல்லியைப் பொறுத்தவரை, ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்று இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

மற்றப்படி, தமிழகத்தில் திமுக, மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், கேரளாவில் கம்யூனிஸ்ட் கூட்டணி, கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்கண்டில் ஜே.எம்.எம் ஆகிய கட்சிகளுடன் மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்று தெரிகிறது.

.