மக்களவைத் தேர்தலில் அடைந்த படுதோல்வியை அடுத்து, காங்கிரஸ், பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாகி வருகிறது.
ஹைலைட்ஸ்
- தற்போது கோவாவில் 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே உள்ளனர்
- கடந்த 2017 ஆம் ஆண்டு கோவாவில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது
- அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது
New Delhi/ Panaji: காங்கிரஸ் - மஜத தலைமையிலான கூட்டணி அரசு, கர்நாடகத்தில் கவிழாமல் இருக்க போராடிக் கொண்டிருக்கும் நிலையில், கோவா மாநிலத்தில் உள்ள 10 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜக-வில் இணைந்துள்ளனர். கோவாவில் காங்கிரஸுக்கு மொத்தமாக 15 எம்.எல்.ஏ-க்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த், “10 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பாஜக-வில் இணைந்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் பாஜக-வின் பலம் 27 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், தாங்கள் சம்பந்தப்பட்ட தொகுதியின் முன்னேற்றத்துக்காகவும் அவர்கள் பாஜக-வுக்கு வந்துள்ளனர். இப்படி இணைவதால் அவர்கள் எங்களுக்கு எந்த வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. யாரும் கட்டாயப்படுத்தாமல் இந்த இணைப்பு நடந்துள்ளது” என்று பேசியுள்ளார்.
2017 கோவாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததை அடுத்து, காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. தற்போது, மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ-க்கள் கட்சித் தாவியுள்ளதால், அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம்.
10 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், தங்களது முடிவு குறித்து சட்டசபை சபாநாயகரை நேரில் சென்று கடிதம் மூலம் தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் உடனிருந்தார். கோவாவில் மொத்தம் இருக்கும் 40 இடங்களில் பாஜக வசம் 17 இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானாவிலும் காங்கிரஸுக்கு மொத்தம் இருந்த 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் 12 பேர், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் சென்ற மாதம் சேர்ந்தனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணியிலிருந்த 18 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் பாஜக முகாம் நோக்கி சென்றுள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏ-க்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை மாநில சட்டசபை சபாநாயகர் இடத்தில் ஒப்படைத்துள்ளனர். சபாநாயகர் இன்னும் அவர்களது ராஜினாமா கடிதத்தை ஏற்கவில்லை. அவர்கள் ராஜினாமா ஏற்கப்படும் பட்சத்தில், பாஜக, மாநிலத்தில் பெரும்பான்மை பெரும்.
கர்நாடகாவில் நிகழும் அரசியல் குழப்பத்தை சரி செய்ய அம்மாநில மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் நிர்வாகி டி.கே.சிவக்குமார், அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தங்கியுள்ள மும்பை ஓட்டலுக்கு நேரில் சென்றுள்ளார். அவர் ஓட்டலுக்கு உள்ளே செல்லக் கூட அனுமதிக்கப்படவில்லை.
நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மக்களவைத் தேர்தலில் அடைந்த படுதோல்வியை அடுத்து, காங்கிரஸ், பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாகி வருகிறது. காங்கிரஸின் இந்த தோல்விக்குக் காரணம், உட்கட்சிப் பூசல்தான் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக பஞ்சாம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் உட்கட்சிப் பூசல் உச்சத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.