This Article is From Mar 06, 2020

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹர்தீப் சிங் ராஜினாமா! அரசுக்கு கடும் நெருக்கடி!!

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் சூழலில் ஆட்சியைக் கலைப்பதற்காக 10 எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயன்று வருகிறது எனப் புகார்கள் எழுந்துள்ளன.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹர்தீப் சிங் ராஜினாமா! அரசுக்கு கடும் நெருக்கடி!!

பாஜக இழுக்கப் பார்க்கிறது என்று கூறப்படும் 10 எம்எல்ஏக்களில் ஹர்தீப் சிங்கும் ஒருவர்.

ஹைலைட்ஸ்

  • பாஜக இழுக்கப் பார்க்கிறது என்று கூறப்படும் 10 எம்எல்ஏக்களில் ஹர்தீப் சிங்
  • எந்தவொரு அமைச்சரும் மக்கள் பணி செய்வதற்கு தயாராக இல்லை என்கிறார் ஹர்தீப்
  • ஹர்தீப்பின் ராஜினாமா கடிதத்தால் காங்கிரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது
Bhopal:

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஹர்தீப் சிங் தனது ராஜினாமா கடிதத்தைச் சட்டசபை சபாநாயகர் என்.பி. பிரஜாபதியிடம் வழங்கியுள்ளார். அந்த கடிதத்தில் காங்கிரஸ் அமைச்சர்களைக் கடுமையாக விமர்சித்துள்ள ஹர்தீப், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டும் தான் கட்சியில் புறக்கணிக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். 

'எந்தவொரு அமைச்சரும் மக்கள் பணி செய்வதற்குத் தயாராக இல்லை. அவர்கள் ஊழல் அரசின் அங்கமாகவே இருக்க விரும்புகின்றனர்' என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஹர்தீப்.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் சூழலில் ஆட்சியைக் கலைப்பதற்காக 10 எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயன்று வருகிறது எனப் புகார்கள் எழுந்துள்ளன. 

பாஜக இழுக்கப் பார்க்கிறது என்று கூறப்படும் 10 எம்எல்ஏக்களில் ஹர்தீப் சிங்கும் ஒருவர்.

இந்த விவகாரம் குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய சிங், 'ஒவ்வொரு எம்எல்ஏக்களுக்கும் 25 - 35 கோடி ரூபாய் வரைக்கும் பாஜக விலை பேசி வருகிறது' என்று கூறினார்.

அதிருப்தியில் உள்ள 10 எம்எல்ஏக்களை மீட்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை இறங்கியது. இதன் பலனாக டெல்லி அருகே கூர்கானிலிருந்து 6 எம்எல்ஏக்கள் மீட்கப்பட்டனர். 

ஆனால் ஹர்தீப்  சிங், ரகுராஜ் கன்சனா, பிசாலால் சிங் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ ஷெரா பையா ஆகியோர் மாயமாகி இருந்தனர். அவர்கள் பாஜக ஆளும் கர்நாடகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பார்கள் எனத் தகவல்கள் பரவியது. 

இந்த நிலையில் ஹர்தீப் சிங் தனது ராஜினாமா கடிதத்தை அளித்திருக்கிறார். 

மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் மொத்தம் 230 உறுப்பினர்கள். ஒரு கட்சி ஆட்சியமைக்க 116 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 120 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளனர். அவர்களில் 114 பேர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். இருவர் பகுஜன் சமாஜையும், ஒருவர் சமாஜ்வாதி கட்சியையும், 4 பேர் சுயேச்சை எம்எல்ஏக்ளும் ஆவார்கள். பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். 2 சட்டமன்ற உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. 

மொத்தம் 14 எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி செய்வதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 'மணல் கொள்ளையர்கள், சீட்டு மோசடி செய்பவர்கள் உள்ளிட்டவர்களைக் காங்கிரஸ் ஒடுக்கியுள்ளது. மாநிலத்தில் இந்த குற்றச் செயல்கள் கடந்த 15 ஆண்டுகளாக நடந்தது' என்று விமர்சித்துள்ளார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா.

காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்காவிட்டால் தாங்கள் செய்த குற்றத்துக்காக மத்தியப் பிரதேச பாஜகவினர் சிறைக்குச் செல்வார்கள். இதனால்தான் காங்கிரஸ் அரசுக்கு எதிராகச் சதி நடக்கிறது என்றும் சுர்ஜிவாலா கூறியுள்ளார். 

.