This Article is From Jun 18, 2020

மணிப்பூரில் கவிழும் பாஜக அரசு? - ஆட்சியமைக்க காங்கிரஸ் உரிமை கோரியதால் பரபரப்பு

கூட்டணி கட்சிகளின் தலைவராக பொறுப்பில் இருக்கும் முன்னாள் முதல்வர் ஒக்ரம் இபோதி சிங், கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். விரைவில் சட்டமன்றத்தை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை நிறைவேற்ற இபோதி சிங் வலியுறுத்தியுள்ளார். 

மணிப்பூரில் கவிழும் பாஜக அரசு? - ஆட்சியமைக்க காங்கிரஸ் உரிமை கோரியதால்  பரபரப்பு

தற்போது,  பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை 9 கூட்டணி எம்எல்ஏக்கள் வாபஸ்  பெற்றுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • மணிப்பூர் சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 60.
  • 21 உறுப்பினர்கள் கொண்ட பாஜக சிறு கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி நடத்துகிறது
  • 9 உறுப்பினர்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது
Guwahati:

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி தற்போது உரிமை கோரியுள்ளது. இதனால் பாஜக அரசு கவிழும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

மணிப்பூர் சட்டமன்றத்தில் மொத்தம் 60 உறுப்பினர்கள் உள்ளனர்.  இங்கு கடந்த 2017-ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.  இதில் எந்த  கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இருப்பினும் 21 எம்எல்ஏக்களைப் பெற்றிருந்த பாஜக, சிறு கட்சிகள், சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார்.

தற்போது,  பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை 9 கூட்டணி எம்எல்ஏக்கள் வாபஸ்  பெற்றனர். 

இதையடுத்து 28 எம்எல்ஏக்களை கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி சிறு கட்சிகள், சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக கோன்ராட் சங்மா தலைவராக இருக்கும் தேசிய மக்கள் கட்சியின் எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தரிவித்துள்ளனர்.  இந்த புதிய கூட்டணி எஸ்.பி.எஃப்.  அல்லது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளளது. இந்த கூட்டணிக்கு திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  

இந்த நிலையில் கூட்டணி கட்சிகளின் தலைவராக பொறுப்பில் இருக்கும் முன்னாள் முதல்வர் ஒக்ரம் இபோதி சிங், கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். விரைவில் சட்டமன்றத்தை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை நிறைவேற்ற இபோதி சிங் வலியுறுத்தியுள்ளார். 

மணிப்பூரில் நடந்து வரும் அதிரடி அரசியல் மாற்றங்களால் பாஜக ஆட்சி அம்மாநிலத்தில் பறிபோகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

.