தற்போது ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வரும் நிலையில், இன்று மாலை அவர் நீதிமன்றம் முன்னர் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது
இரண்டு நாட்களுக்கு முன்னர், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கொடுக்க மறுத்தது. உச்ச நீதிமன்றமும், சிதம்பரத்தின் மனு குறித்து உடனடியாக விசாரிக்க முடியாது என்று சொல்லிவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் பொதுவெளிக்கு வராமல் இருந்தார். இப்படிபட்ட சூழலில், யாரும் எதிர்பாராத விதமாக டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் சிதம்பரம். தொடர்ந்து டெல்லியில் உள்ள தனது வீட்டிற்கு அவர் சென்றார். அங்கு அவர் கைது செய்யப்பட்டார். சிபிஐ அதிகாரிகள், ப.சிதம்பரத்தைக் கைது செய்ய வீட்டின் சுவரை எகிறி குதித்தது வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளது.
தற்போது ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வரும் நிலையில், இன்று மாலை அவர் நீதிமன்றம் முன்னர் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது. சிதம்பரத்தின் கைதுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தேசிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி., ஜெயக்குமார், இந்த விவகாரம் குறித்துத் தனது பார்வையைப் பகிர்ந்து கொண்டார்.
“நேற்று டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு வந்த சிதம்பரம், சில விஷயங்களைத் தெளிவாக எடுத்துரைத்தார். முதலாவது, ஐ.என்.எக்ஸ் வழக்கில் தான் குற்றவாளி கிடையாது என்றார். இரண்டாவது, குற்றப் பத்திரிகையிலும் தனது பெயர் இல்லை என்றார். மூன்றாவது, தான் எங்கும் ஓடி ஒளியவில்லை எனத் தெரிவித்தார். இப்படி வெளிப்படையாக ஊடகங்களைப் பார்ப்பவரின் பெயருக்குக் கலங்கும் விளைவிக்க வேண்டும் என்றுதான் வீட்டை எகிறிகுதித்துக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இது முற்றிலும் கண்டனத்துக்குரியது.” என்று ஆரம்பித்தார்.
தொடர்ந்து அவர், “9 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு வழக்கில் தொடர்புபடுத்தி, 11 ஆண்டுகளுக்குப் பின்னர் அதில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது மிக முக்கிய பிரச்னை என்பது, பொருதாரத் தொய்வுதான். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் பொருளாதாரத்தைத் தொடர்ந்து சரிவுப் பாதையில் இட்டுச் செல்கிறது.
ஆட்டோமொபைல் துறையில் சரிவு, பிரதான உற்பத்தித் துறைகளில் சரிவு, வேலைவாய்ப்பின்மை கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதளபாதாளத்துக்குச் சென்றுள்ளது, பொதுத் துறை - தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கி வருகின்றன. இப்படி பொருளாதாரத்தின் அனைத்து மட்டங்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது மத்திய அரசு.
அதில் கவனம் செலுத்தாமல், காஷ்மீருக்கு தடாலடியாக சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதில் முனைப்புக் காட்டியது மோடி அரசு. இப்போது ப.சிதம்பரத்தை ஜனநாயகப் படுகொலை செய்யும் வகையில் கைது செய்துள்ளது. அரசின் தோல்விகளை கவனித்துவிடக் கூடாது என்பதற்காகவே இப்படிப்பட்ட தொடர் நடவடிக்கைகளை மோடி அரசு எடுக்கிறதோ என்ற சந்தேகம் உள்ளது. என் கணிப்பு சரியாக இருந்தால் இத்தோடு இந்த தடாலடி நடவடிக்கைகள் நிற்காது…” என்று மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து பரபரப்புக் காரணங்களை அடுக்குகிறார்.