இன்று அசாம் மாநிலத்துக்குச் செல்கிறார் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி
New Delhi: குடியுரிமை திருத்தச் சட்டம் அமல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக அசாம் மாநிலத்தில் நாளுக்கு நாள் போராட்டம் வீரியமடைந்து வருகிறது. இந்நிலையில், இன்று அசாம் மாநிலத்துக்குச் செல்கிறார் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி. அவர் அசாமிற்குப் புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்து, “2016 ஆம் ஆண்டு பாஜக அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விட குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி மோசமானது,” என்று கறாராக விமர்சித்துள்ளார்.
முன்னதாக ராகுல் காந்தி, வடகிழக்குப் பகுதியில் தடுப்புக் காவல் முகாம்கள் இருப்பதைப் பற்றி ட்விட்டர் மூலம் தெரிவித்தார். அதை ஆளுங்கட்சி, அப்பட்டமான பொய் என்று தெரிவித்தது. அதற்கு ராகுல், “எனது ட்வீட்டை நீங்கள் எல்லோரும் பார்த்தீர்கள். நரேந்திர மோடி, தடுப்புக் காவல் முகாம்கள் இல்லை என்று முதலில் பேசுகிறார். அதைத் தொடர்ந்து தடுப்புக் காவல் முகாம்கள் இருக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் வரும். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், யார் பொய் சொல்கிறார் என்று,” எனக் காட்டமாக பதிலடி கொடுத்தார்.
அந்த ட்வீட்டில் ராகுல், “ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரதமர், இந்திய தேசத்திடம் பொய் சொல்கிறார். பொய்கள், பொய்கள், பொய்கள் மட்டும்தான்…” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பாஜக தரப்பு, “பொய்களின் தலைவர் ராகுல் காந்தி. அவரிடமிருந்து மாண்பையும் மரியாதையையும் எதிர்பார்ப்பது தவறான ஒன்று. அசாமில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புக் காவல் முகாமானது அங்கு ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசால் கட்டப்பட்டது,” என்று எதிர் வாதம் வைத்தது.
தொடர்ந்து அவர் சிஏஏ, என்ஆர்சி குறித்துப் பேசுகையில், “இப்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை பணமதிப்பிழப்பை விட மோசமானது. இது எளிய, ஏழை மக்களை அதிகம் பாதிக்கும்,” என்றார்.
மதத்தின் அடிப்படையில் இந்தியாவில் குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திருத்திற்கு, ‘இந்திய அளவில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில்' மிகப் பெரும் எதிர்ப்பு இருப்பதாக சொல்கிறது காங்கிரஸ்.
அதே நேரத்தில் இந்தக் குற்றச்சாடுகளை மறுக்கும் மத்திய அரசு தரப்பு, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து மத ஒடுக்குமுறையால் வெளியேறும் அந்நாட்டுச் சிறுபான்மையினருக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பை வழங்கும் என்கிறது. இந்திய சட்ட சாசனத்தின் மதச்சார்பின்மை இந்தச் சட்டத்தின் மூலமாக பாதிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் சட்டத்தை விமர்சிப்பவர்கள்.