புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புதிய கல்விக்கொள்கை குறித்து பேசிய நடிகர் சூர்யா, மூன்று வயதிலேயே 3 மொழிகள் திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் எப்படி இதனை சமாளிக்கப் போகிறார்கள்.
அதேபோல குறைவான ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்திருப்பது சரியல்ல. அந்த பள்ளிகளை தரம் உயர்த்தாமல் பள்ளிகளை மூடினால் கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் எங்கு செல்வார்கள். அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நுழைத்தேர்வு நடத்துவது ஏன்?
எல்லோரும் அமைதியாக இருந்தால் இது நிச்சயம் திணிக்கப்படும். எனவே புதிய கல்வி கொள்கை மீதான ஆலோசனைகளை மாற்றங்களை ஆசிரியர், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள் என்றார்.
சூர்யாவின் இந்த விமர்சனம் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு பெரும்பாலான ஆளும் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றர். அந்த வகையில் சூர்யாவின் கருத்து குறித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, புதிய கல்விக் கொள்கை குறித்து நன்கு தெரிந்து கொண்டு பேசுபவர்களுக்கு பதில் கூறலாம். ஆனால் எதுவும் தெரியாமல் பேசுபவர்களுக்கு எப்படி பதில் கூற முடியும்? புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா அரை வேக்காட்டுத்தனமாக பேசுகிறார் என கடுமையாக விமர்சித்தார்.
இதேபோல், புதிய கல்விக்கொள்கை குறித்து பேசிய நடிகர் சூர்யாவை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையும் கடுமையாக விமர்சித்தார். கிராமப்புற ரசிகர்களுக்காக உங்கள் படத்தின் டிக்கெட் விலையை குறைப்பீர்களா? தங்கள் படத்தின் விளம்பரத்திற்காகவும், அரசியல் நுழைவுக்காகவும் அவசரமாக கருத்து கூறுகிறீர்களா? என்று அவர் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவிற்கு உண்டு. புதிய கல்விக் கொள்கை குறித்து தம்பி சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு என்று கமல் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இதேபோல், நடிகர் ரஜினிகாந்த்தும் சூர்யாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தார், புதிய கல்வி கொள்கை பற்றி சூர்யா எழுப்பிய கேள்விகளை நான் வரவேற்கிறேன். அவர் சொன்ன விஷயங்களை சர்ச்சைக்குள்ளாக்கி விட்டனர் என்றாலும், விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்ததால் இப்படி சொல்லியிருக்கிறார். இதுபற்றி நான் பேசினால்தான் பிரதமர் மோடிக்கு கேட்கும் என்று பலர் சொன்னார்கள். சூர்யா பேசியது கூட மோடிக்கு கேட்டுவிட்டது என்று அவர் கூறினார்.
இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தை தான் வரவேற்பதாக காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்து பொதுவாக எல்லோரும் ஆதரிக்கக்கூடிய கருத்து, எனவே நானும் ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன். கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய அரசுப் பள்ளிகளின் தரம், இன்னும் அதிகமாக உயர்த்தபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.