हिंदी में पढ़ें Read in English
This Article is From Jan 02, 2019

‘கோவா முதல்வர் படுக்கையறையில் ரஃபேல் சீக்ரெட்…!’- ரகசியம் உடைக்கும் காங்கிரஸ்

டிசம்பர் 14 அன்று, உச்ச நீதிமன்றம், ‘ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எந்தவித விசாரணையும் நடத்த வேண்டிய அவசியமில்லை’ என்று தீர்ப்பளித்தது.

Advertisement
இந்தியா
New Delhi/Panaji:

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எந்தவித விசாரணையை நடத்தப்படத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு சில நாட்கள் கடந்துவிட்டன. ஆனாலும், அதை அவ்வளவு எளிதாக விட்டுவிட காங்கிரஸ் விரும்பவில்லை. இன்று காங்கிரஸ் தரப்பு, ‘கோவாவைச் சேர்ந்த ஒரு அமைச்சர், ‘முதல்வர் மனோகர் பாரிக்கர் அறையில் ரஃபேல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் இருக்கின்றன' என்று சொல்லியிருக்கிறார். அதற்கான ஆடியோ பதிவும் எங்களிடம் உள்ளது' என்று கூறி அதிர்ச்சி கிளப்பியிருக்கிறார். 

36 ரஃபேல் ஜெட் விமானங்களை ஒப்பந்தம் போட்டபோது, பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர் மனோகர் பாரிக்கர்தான். ஆனால், கோவாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலை அடுத்து, 2017 மார்ச் மாதம் மாநில முதல்வராக பொறுப்பேற்றார் பாரிக்கர். ஆனால், கடந்த சில மாதங்களாக கணைய பாதிப்பால் அவதிப்பட்டு வரும் பாரிக்கர், வீட்டிலேயே தங்கி சிகிச்சைப் பெற்று வருகிறார். 

இந்த சூழலில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுரேஜ்வாலா, ‘சமீபத்தில் கோவா அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியுள்ள பாரிக்கர், ‘யாரும் ரஃபேல் குறித்தான முழு ரகசியத்தைத் தெரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் ஆவணங்கள் எனது படுக்கையறையில் உள்ளது' என்று பேசியுள்ளார்' என்று கூறினார். தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்கள் மத்தியில் கோவா மாநில அமைச்சர் விஷ்வஜீத் ரானே, இது தொடர்பாக பேசுவதுபோல ஒரு ஆடியோவையும் வெளியிட்டார். 

Advertisement

ஆடியோவின் நம்பகத்தன்மை குறித்து இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. ஆடியோவை வெளியிட்டதை அடுத்து பேசிய ரந்தீப் சிங், ‘ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக அனைத்து ஆவணங்களும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் பாரிக்கரிடம் உள்ளது. அதை ஏன் அவர் மறைத்து வைக்க வேண்டும். எங்களுக்கு இதில் இருக்கும் உண்மை என்னவென்று தெரிந்தாக வேண்டும்' என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 14 அன்று, உச்ச நீதிமன்றம், ‘ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எந்தவித விசாரணையும் நடத்த வேண்டிய அவசியமில்லை' என்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக இன்று முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். 

Advertisement

காங்கிரஸ் தரப்போ, ‘கூட்டு நாடாளுமன்ற விசாரணைக்கு ரஃபேல் ஒப்பந்தம் உள்ளாக்கப்பட வேண்டும்' என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

Advertisement