இன்று மதியம் 1:30 மணிக்குள் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் ஆளுநர்
Bengaluru: கர்நாடக சட்டமன்றத்தில், ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடக்கும் எனத் தெரிகிறது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்றே நடந்திருக்க வேண்டியது. ஆனால், தொடர்ந்து நிலவி வரும் அரசியல் குழப்பங்களால், வாக்கெடுப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து எதிர்க்கட்சியான பாஜக, தர்ணாவில் ஈடுபட்டது. தர்ணாவின் ஒரு பகுதியாக சட்டமன்றத்தக்கு உள்ளேயே தங்கினர் பாஜக எம்.எல்.ஏ-க்கள். அவர்களுக்கு டின்னர் ஆர்டர் செய்து கொடுத்துள்ளது கர்நாடக அரசு.
இது குறித்து கர்நாடக துணை முதல்வர் ஜி.பரமேஷ்வரா, “அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டியது எங்களது கடமையாகும். சில பாஜக எம்.எல்.ஏ-க்களுக்கு நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்புப் பிரச்னை உள்ளது. அரசியலைத் தாண்டி நாங்கள் அனைவரும் நண்பர்கள்தான். இதுதான் ஜனநாயகத்தின் அழகு” என்று பெருமையுடன் கூறியுள்ளார்.
நேற்று தர்ணாவில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ-க்கள், ஆளுங்கூட்டணி அரசு சார்பில் ஆர்டர் செய்யப்பட்ட இரவு உணவை சாப்பிட்ட பிறகு, சட்டமன்ற வளாகத்திலேயே உறங்கிவிட்டனர். சிலர் வீட்டிலிருந்து தலையணை மற்றும் பெட்ஷீட் எடுத்து வரச் சொல்லி, சொகுசாக படுத்து உறங்கினார்கள்.
கர்நாடக சட்டமன்றத்தில் உறங்கும் எடியூரப்பா.
எதிர்க்கட்சித் தலைவரான பி.எஸ்.எடியூரப்பா, சட்டமன்றத்தின் நடுவில் படுத்துத் தூங்கினார். மாநிலத்தில் தொடர்ந்து வரும் அரசியல் பரபரப்பு குறித்து NDTV-யிடம் எடியூரப்பா பேசுகையில், “இந்த அரசுக்கு மெஜாரிட்டி கிடையாது. இந்த விஷயத்தை வைத்து அவர்கள் எங்களது பொறுமையை சோதித்துப் பார்த்தார்கள். ஆனால், நாங்கள் அமைதியாக இருந்து நிலைமையை சமாளித்துவிட்டோம். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை நாங்கள் பின் வாங்கப் போவதில்லை. தொடர்ந்து தர்ணாவில் ஈடுபடுவோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே, சட்டமன்றக் கூட்டத் தொடர் முடித்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக எம்.எல்.ஏ-க்கள், ஆளுநரிடம் முறையிட்டனர். அதையடுத்து ஆளுநர், இன்று மதியம் 1:30 மணிக்குள் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.