அயோத்தி விவகாரம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் காங்கிரஸை குற்றம் சுமத்தியிருக்கிறார் பிரதமர்.
New Delhi: அயோத்தி விவகாரம் தற்போது வட மாநிலங்களில் சூடு பிடித்து வருகிறது. இதனை நன்றாக பயன்படுத்திக் கொண்டுள்ள சிவசேனா கட்சி மத்தியில் ஆளும் பாஜகவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையே அடுத்த ஆண்டு தொடக்கத்தின்போது, அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில தேர்தலில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மாநிலத்தின் ஆல்வார் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி பேசியதாவது-
அயோத்தி விவகாரத்தை காங்கிரஸ் கட்சி அரசியலாக்கி வருகிறது. 2019-ல் பொதுத் தேர்தல் வருகிறது.
ஆட்சிக்கு வருவதற்காக காங்கிரஸ் எதை வேண்டுமானாலும் செய்யும். தேர்தல் நடைபெறவுள்ளதால் அயோத்தி வழக்கை ஒத்திப் போட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. அக்கட்சியின் இதுபோன்ற அடாவடித்தனத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு மோடி பேசினார்.
அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் ஜனவரியில் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது, அயோத்தி விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது.
அக்டோபர் மாத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதனை அவசரமாக விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.