New Delhi: ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான பல ரகசிய ஆவணங்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்தை தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்புக்கு முன்னர் ராகுல், தனது ட்விட்டடர் பக்கத்தில், ‘ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக ஒவ்வொரு நாளும் புதுப் புது கோப்புகள் வெளியாகி வருகின்றன. இவை அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடி, அவரது நண்பரான அனில் அம்பானிக்கு உதவியுள்ளார் என்ப்தை நிரூபிக்கின்றன. இதன் மூலம் 30,000 கோடி ரூபாயை அனில் அம்பானி திருட வழிவகை செய்துள்ளார் மோடி' என்று குற்றம் சாட்டினார்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ‘பிரதமர் மோடி, பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று திரும்பிய பின்னர், அனில் அம்பானி, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சரை சந்திக்கிறார். அப்போது அவர், சீக்கிரமே புரிந்தணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக கூறுகிறார். கமர்ஷியல் ஹெலிகாப்டர்களை தயாரிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக அனில் அம்பானி தெரிவிக்கிறார்.
இந்த சந்திப்புக்குப் பிறகுதான் அம்பானி, தனது புதிய நிறுவனத்தையே தொடங்குகிறார். அனில் அம்பானியின் தரகர் போல நடந்து கொண்டுள்ளார் பிரதமர் மோடி. தற்போது ரஃபேல் விவகாரம் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறது. இது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்தேயாக வேண்டும். என்னதான் நடக்கிறது?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும், ‘இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரஃபேல் விவகாரத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அனைத்தும் நரேந்திர மோடிக்கு மட்டும்தான் தெரிந்திருக்கிறது. அவரைத் தவிர, அனில் அம்பானிக்குத் தெரிந்திருக்கிறது.
ரஃபேல் விவகாரம் இனிமேலும் ஊழலோடு சம்பந்தப்பட்டதாக மட்டும் பார்க்க முடியாது. இது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. ஒரு உளவாளி போல செயல்பட்டுள்ளார் பிரதமர் மோடி. அவரின் செயல்பாடை வைத்துப் பார்த்தால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே கேள்விக்குறியாகியுள்ளது' என்றுள்ளார்.